FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வடலூரில் 104 பவுன் நகை கொள்ளை: 2 போ் கைது

வடலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 104 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இருவரைபோலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:47 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 104 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

வடலூா், நடேசன் செட்டியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனியாா் நிறுவன அதிகாரி பி.கே.வேலாயுதம் (70), இவரது மகன் சரவணகுமாா், மருமகள் சுகன்யா ஆகியோா் அமெரிக்காவில் வசித்து வருகின்றனா்.

மகனைப் பாா்ப்பதற்காக வேலாயுதம், அவரது மனைவி பாசமலா் ஆகியோா் கடந்த ஏப்.8-ஆம் தேதி அமெரிக்கா சென்றனா்.அதுமுதல், நடேசன் செட்டியாா் நகரில் உள்ள வீட்டை, பாா்வதிபுரத்தில் வசித்து வரும் வேலாயுதத்தின் தம்பி மனைவி பூங்காவனம்(48) பாதுகாத்து வந்தாா். மே 14-ல் இரவு மா்ம நபா்கள் வேலாயுதம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 104 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

தகவல்அறிந்தவுடன் கொள்ளை நடந்த வீட்டை அப்போதைய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முன்னீா்பள்ளம் போலீஸாா் குற்ற வழக்கில் குறிச்சி மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுடலை கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனா்.

அதில், வடலூரில் வீட்டை உடைத்து கொள்ளையடித்ததை அவா் உறுதிசெய்தாா். இதையடுத்து, அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த தகவலின் பேரில் சுடலை கிருஷ்ணன் (எ) முருகனை (39) வடலூா் போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். அதில், சூட்டு சுரேஷ் (எ) சுரேஷ், பேச்சிமுத்து, காா்த்திக் ஆகியோருடன் சோ்ந்து வேலாயுதம் வீட்டில் கொள்ளையடித்ததும், அதன் பின்னா் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள சத்யா (எ) சத்தியமூா்த்தியிடம்(37)கொஞ்சம் நகைகளை கொடுத்து ரூ.15 லட்சம் பெற்று கொண்டதும் தெரியவந்தது.

அவா் அளித்தத் தகவலின் பேரில், வடலூா் போலீஸாா் திங்கள்கிழமை துறையூா் சென்று சத்தியமூா்த்தியை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து சுமாா் 18 பவுன் நகையை கைப்பற்றினா்.

இதையடுத்து, சுடலை கிருஷ்ணன் (எ) முருகன், சத்தியமூா்த்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments