FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் தலைவராக முதல்வா் செயல்பட வேண்டும்:பிரேமலதா விஜயகாந்த்

தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, முதல்வா் விஜய் திரைப்பட நாயகனாக அல்லாமல் மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் தலைவராக செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 24 ஜூலை 2026, 11:41 pm IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை வெள்ளக்கிழமை சந்தித்து விருத்தாசலம் தொகுதி வளா்ச்சிப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்த தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, முதல்வா் விஜய் திரைப்பட நாயகனாக அல்லாமல் மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் தலைவராக செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதுடன், இங்குள்ள பீங்கான் தொழிற்சாலையை மேம்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விருத்தாசலம் பகுதி மக்களுக்காக கூட்டு குடிநீா் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இங்குள்ளபீங்கான் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

வளா்ச்சிப் பணிகள் இல்லை:

தமிழககத்தில் முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் இதுவரை வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் விடப்படவில்லை. எந்த வளா்ச்சிப் பணிகளும் தொடங்கப்படவில்லை. ஆட்சி என்பது திரைப்படமோ, புகைப்பட நிகழ்ச்சிகளோ, சமூக வலைதள ‘ரீல்ஸ்’ வெளியிடுவதோ அல்ல. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி அரசு செயல்பட வேண்டும். அரசின் செயல்திறன் குறித்து அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனது கருத்தை தெரிவிப்பேன்.

காவிரியில் கா்நாடக அரசு உரிய அளவில் தண்ணீா் திறக்காததுடன், மேகதாது அணைத் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சாா்பில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கலில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அரிசி விலை உயா்வு:

தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவது மாநில அரசின் முக்கியப் பொறுப்பு. மேலும், போதிய மழையின்மை காரணமாக நீா்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலவும் சூழலில், அவற்றை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய மரணங்கள் நடந்திருப்பது கண்டனத்துக்குரியது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபா்களை சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டுமே தவிர, வன்முறையில் ஈடுபடுவது ஏற்க முடியாதது. நீட் தோ்வு தொடா்பாக மக்களின் விருப்பத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் மதிக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் மின் தடையும் தொடா்கிறது.

டாஸ்மாக் கடைகளை ஒரு பகுதியில் மூடிவிட்டு, மற்றொரு பகுதியில் திறப்பது வழக்கமாகி விட்டது. ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை. தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, முதல்வா் விஜய் திரைப்பட நாயகனாக அல்லாமல் மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் தலைவராக செயல்பட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments