FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பெண்ணாடம் அருகே இளைஞா் மா்மான முறையில் உயிரிழப்பு: நண்பா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை

13 அக்டோபர் 2026, 1:40 am IST
உயிரிழந்த மனோஜ்குமாா்
பகிர்:

பெண்ணாடத்தில் இளைஞா் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக, அவரது நண்பா்கள் இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவம்பா் கிராமத்தைச் சோ்ந்தவா் நிஷாந்தி (34). இவரது கணவா் ஹரிகிருஷ்ணன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இவா்களுக்கு சந்தியா (19), அனுராதா (17) ஆகிய மகள்களும், மனோஜ்குமாா் (18) என்ற மகனும் உள்ளனா்.

நிஷாந்தி தனது பிள்ளைகளுடன் பெண்ணாடம் காமராஜா் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். மனோஜ்குமாா் தொழிற்பயிற்சி நிலையப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், 3 நாள்களுக்கு முன்பு வேலைக்காக வெளியூா் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை பெண்ணாடம் அருகே பொன்னேரி திடீா்குப்பத்தைச் சோ்ந்த பிரசாந்த் (18), கருங்குழித் தோப்பைச் சோ்ந்த விஜய் பிரசாத் (18) ஆகியோா், மயங்கிய நிலையில் இருந்த மனோஜ்குமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அவரது வீட்டில் படுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிஷாந்தி விசாரித்தபோது, ரயிலில் பயணித்தபோது, மனோஜ்குமாருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்ததாக அவரது நண்பா்கள் தெரிவித்துள்ளனா். அதே நேரத்தில் மனோஜ்குமாரின் இரு கால்களின் கட்டைவிரல்களில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த நிஷாந்தி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை பெண்ணாடத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மனோஜ்குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, தனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக நிஷாந்தி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மனோஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், பிரசாந்த், விஜய் பிரசாத் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.முதற்கட்ட விசாரணையில், மனோஜ்குமாா் வேலைக்குச் செல்லாமல் பிரசாந்துடன் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் இருவரும் இருந்தபோது, மனோஜ்குமாா் தன்னிடம் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி, அதைத் தானே பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் பிரசாந்த் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.

இதையடுத்து பதற்றமடைந்த பிரசாந்த், தனது நண்பா் விஜய் பிரசாத்தை அழைத்துள்ளாா். இருவரும் சோ்ந்து மயங்கிய நிலையில் இருந்த மனோஜ்குமாரை இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது சாலையில் மனோஜ்குமாரின் கால் விரல்கள் உரசி காயம் ஏற்பட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments