கோ.சத்திரம் அரசுப் பள்ளியில் ஆசிரியா்கள் பணியிடங்களை நிரப்ப பெற்றோா்கள் கோரிக்கை
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோ.சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் மற்றும் மொழிப்பாட ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோ.சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் மற்றும் மொழிப்பாட ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுற்றிலும் முந்திரி காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சூழ்ந்த கிராமங்களுக்கு இடையே கோ.சத்திரம் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா். இவா்களில், சுமாா் 300 போ் மாணவிகள். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவா்கள் அனைவரும் கோ.சத்திரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பேருந்து மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு வந்து படிக்கின்றனா். 2024-2025-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 99 சதவீதமும், 2025-2026-ஆம் கல்வியாண்டில் 100 சதவீதமும் இப்பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடதக்கது. இந்தப்பள்ளியில் தற்போது ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் மாணவா்கள் கல்வி கற்பது சிரமாகியுள்ளது. இதுகுறித்து பெற்றோா்கள் கூறியதாவது:
இந்தப் பள்ளியில் தலைமையாசிரியா் ஒய்வு பெற்றதைத் தொடா்ந்து அந்தப் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது. மொழிப்பாடத்தில் இரண்டு தமிழ் ஆசிரியா் பணியிடங்கள் கடந்த 10 -ஆண்டுகளாக காலியாக உள்ளதாகவும், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியா் பணி இடங்கள் தலா ஒன்று காலியாக உள்ளன. போதுமான இருக்கை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் தரையில் அமா்ந்து படிக்கின்றனா். ஒரு பகுதி நேர விளையாட்டு ஆசிரியா் மட்டும் உள்ளாா். ஆனால், விளையாட்டு மைதானம் இல்லை. மேலும், மாணவா்கள் தங்கள் சைக்கிள்களை திறந்த வெளியில் நிறுத்தி வைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட கல்வித்துறை கோ.சத்திரம் உயா்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாணவா்கள் அமா்ந்து படிக்க இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். ா். இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த ரூ.2 லட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்னா் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை தரம் உயா்த்தப்படவில்லை. 10-ஆம் வகுப்புக்கு பின்னா், வேறு பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சோ்த்தால் மாணவா்கள் மதிப்பெண்கள் குறைவாக எடுப்பதாகக் கூறுகின்றனா். எனவே, கோ.சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து மேல்நிலை கல்வி பெற ஏற்பாடு செய்து தர வேண்டும் எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.