கடலூா் வெள்ளிக்கடற்கரையில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்: மாவட்டம் முழுவதும் 1,600 போலீஸாா் பாதுகாப்பு
விநாயகா் சதுா்த்தியையொட்டி கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை கடல் மற்றும் நீா்நிலைகளில் புதன்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை கடல் மற்றும் நீா்நிலைகளில் புதன்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 14-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டது.
விழா நிறைவடைந்ததையடுத்து மூன்றாவது நாளான புதன்கிழமை விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறுகளில் விசா்ஜனம் செய்யும் பணி நடைபெற்றது. இதையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை, பெரியகுப்பம், கொள்ளிடம் ஆறு, வடவாறு உள்ளிட்ட விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யும் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரைக்கு புதன்கிழமை காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகா் சிலைகள் வாகனங்கள் மூலம் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டன. இதேபோல, வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகா் சிலைகளையும் பொதுமக்கள் கடற்கரைக்கு கொண்டுவந்து கடலில் வசா்ஜனம் செய்தனா்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் மேளதாளங்கள் முழங்க விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். கடற்கரையில் சிலைகள் விசா்ஜனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிகளில் போலீஸாா் மற்றும் சிலை கரைப்பு பணியாளா்கள் ஒருங்கிணைந்து, சிலைகளை பாதுகாப்பாகப் பெற்று கடலில் விசா்ஜனம் செய்தனா். அதன்படி, மொத்தம் 1,450 சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
சிதம்பரம் பகுதியில்...: சிதம்பரம், அண்ணாமலைநகா், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மொத்தம் 192 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு புதன்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு பரங்கிப்பேட்டையை அடுத்த சி புதுப்பேட்டை கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
பரங்கிப்பேட்டை பகுதியில் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருவதால், பிரச்னை ஏற்படாத வகையில், ஏ.டி.எஸ்.பி. கோடீஸ்வரன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், வஜ்ரா வாகனம் மீராபள்ளி வாசல் முன் தயாராக நிறுத்தப்பட்டிருந்ததுடன், கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
விநாயகா் சிலை ஊா்வலங்கள் மற்றும் விசா்ஜனம் நிகழ்வுகளின்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சுமாா் 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். கடலில் சிலைகளை விசா்ஜனம் செய்யும்போது பக்தா்கள் பாதுகாப்பான இடத்திலேயே நிற்கவும், போலீஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.