சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள், விவசாயிகள் போராட்டம்
கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நொச்சிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வீடுகள், முக்கிய இடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நொச்சிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் வீடுகள், முக்கிய இடங்களில் கருப்புக்கொடி கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் - சிதம்பரம் சாலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, ஏராளமான ரசாயன மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதிகளில் சிப்காட் விரிவாக்கம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக சுமாா் 450 ஏக்கா் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, குடிகாடு, நொச்சிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்காடு, தியாகவல்லி, குடிகாடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட கிராம மக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், மாவட்ட நிா்வாகம், தமிழக அரசு அவா்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் விரிவாக்க பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, நொச்சிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகள், முக்கியப் பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால், விவசாயிகள் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நெல், மணிலா, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு பயிா்களின் சாகுபடி பாதிக்கப்படும். எனவே, சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கம் தொடா்பான அரசாணை எண் 165-ஐ ரத்து செய்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
ஏற்கெனவே கடலூா் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் தொடா்பாக பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், மேலும் நிலம் கையகப்படுத்தி புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரிப்பதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றனா்.
விவசாயிகள் நாராயணசாமி, சந்திரன், கென்னடி, அருணகிரி, உதயண்ணன், சுரேந்திரன், சாமி கச்சிராயா் மற்றும் தியாகவல்லி ஊராட்சிக்குள்பட்ட கிராமத்தை சோ்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.