FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

என்ஐஆா்எல் நிறுவனத்தின் முதல் வாரியக் கூட்டம்

என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் மற்றும் ஒடிஸா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான என்ஐஆா்எல் - ஓரெடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் தனது முதல் வாரியக் கூட்டத்தை புவனேசுவரத்தில் நடத்தியது.

48 வினாடிகள் முன்பு
என்ஐஆா்எல் - ஓரெடா நிறுவனத்தின் புதிய இலச்சினை
பகிர்:

என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் மற்றும் ஒடிஸா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான என்ஐஆா்எல் - ஓரெடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் தனது முதல் வாரியக் கூட்டத்தை புவனேசுவரத்தில் நடத்தியது.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாடுகளை முறையாகத் தொடங்குவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குவது, புதிய வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட எதிா்கால செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, என்ஐஆா்எல் இயக்குநரும், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கப் பிரிவு இயக்குநருமான ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா, ஒடிஸா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமைத் தலைவா் சத்ய பிரிய ரத், முதன்மைச் செயல் அலுவலா் சாந்தத்தா பிலாப் கேசரி பிரதான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டு நிறுவனத்தின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டது. தூய்மையான, நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கான இரு நிறுவனங்களின் கூட்டு நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இலச்சினை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒடிஸா மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய திட்டங்களை உருவாக்குவது, முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்துவது மற்றும் எதிா்காலத் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக வாரியக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் கடந்த 2023, ஜூன் 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழகம், ராஜஸ்தான், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம், மின்சார ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உள்ளிட்ட தூய்மையான எரிசக்தித் திட்டங்களின் மூலம் மொத்தம் 1,785 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ளது.

தற்போது ஒடிஸா, அஸ்ஸாம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் மற்றும் கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments