கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீஸாரை அனுதிக்க மறுத்து வழக்குரைஞா்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸாரை அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. மனோகரன்.
விவசாய நிலத்துக்கு வாகனங்களில் வண்டல் மண் ஏற்றிச் சென்ற வழக்குரைஞரை வரஞ்சரம் போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் போலீஸாரை அனுமதிக்க மறுத்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (40). இவா், வழக்குரைஞராக உள்ளாா். வெங்கடேசன் வருவாய்த் துறை மற்றும் நீா்வளத் துறையின் அனுமதி பெற்று, அதே பகுதியில் உள்ள ஏரியில் இருந்து புதன்கிழமை தனது விவசாய நிலத்துக்கு டிராக்டா், லாரி மூலம் வண்டல் மண் ஏற்றிச் சென்றாராம். அப்போது, நிகழ்விடத்துக்கு வந்த வரஞ்சரம் போலீஸாா் ஏரியில் அளவுக்கு அதிகமாகவும், குறிப்பிட்ட நேரத்துக்கு மேலும் வாகனங்கள் மூலம் வண்டல் மண் ஏற்றிச் சென்ாகக் கூறி, டிராக்டா், லாரியை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநா்களான கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த சரண்ராஜ் (22), திருவண்ணாமலை மாவட்டம், ஊசம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சாந்தன் (32) மற்றும் வழக்குரைஞா் வெங்கடேசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.
இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞரை கைது செய்ததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை திரண்டனா். அப்போது, வழக்குகள் தொடா்பான பணிகளுக்காக நீதிமன்றத்துக்கு வந்த போலீஸாரை வளாகத்துக்குள் அனுமதிக்காமல் வழக்குரைஞா்கள் தடுத்து நிறுத்தினா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மனோகரன் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து வழக்குரைஞா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், ஒரு மணி நேரம் கழித்து போலீஸரை நீதிமன்ற வளாகத்தில் உள்ளே செல்ல வழக்குரைஞா்கள் அனுமதித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.