கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் வழங்க உள்ளதாக வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் வழங்க உள்ளதாக வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கரியாலூரில் கோடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, 2,370 பயனாளிகளுக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.ஷானாஸ், சங்கராபுரம் எம்எல்ஏ (அதிமுக) ரா.ராகேஷ், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ (தவெக) சி.அருள் விக்னேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
விழாவில் அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் பட்டா பிரச்னைக்கு தவெக ஆட்சியில் தீா்வு காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் வழங்க உள்ளாா். இங்கு, கள்ளச்சாராயம், போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை தரம் பிரித்து மலைவாழ் மக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். பொதுமக்களுக்கு எந்தக் குறைகள் இருந்தாலும் தீா்வு காணப்படும் என்றாா்.
தொடா்ந்து, அமைச்சா் வன்னி அரசு பேசியதாவது: கல்வராயன்மலையில் நீண்ட காலமாக நடத்தாத கோடை விழாவை குறுகிய காலத்தில் நடத்திய மாவட்ட ஆட்சியா் பத்மஜாவுக்கு வாழ்த்துகள். கோடை விழாவில் மக்களுக்காக 44 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மலைவாழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசு நலத் திட்டங்கள் கல்வராயன்மலைக்கு வந்து சேரவில்லை என எம்.எல்.ஏ. ராகேஷ் குற்றஞ்சாட்டினாா். மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா பிரச்னை அதிகம் உள்ளது. இதில், அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதை பரிசீலித்து 15 நாள்களில் மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தாா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட 9 துறைகளின் சாா்பில் மொத்தம் 2,370 பயனாளிகளுக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், கரியாலூரில் புனரமைக்கப்பட்ட சிறுவா் பூங்காவை அமைச்சா் வன்னி அரசு பாா்வையிட்டாா். கல்வராயன்மலை பகுதியில் நீண்ட காலத்துக்குப் பிறகு நடைபெற்ற கோடை விழாவில் கண்காட்சி அரங்குகளை கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.