எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைக்காததற்கு எதிர்ப்பு: தலைமைச் செயலரிடம் நியமன எம்.எல்.ஏ.க்கள் மனு
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுவை அரசின் தலைமைச் செயலரிடம் நியமன எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுவை அரசின் தலைமைச் செயலரிடம் நியமன எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
புதுவை சட்டப்பேரவையில் அரசின் நலத் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் வே.நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தைப் பின்பற்றி, புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் பங்கேற்க பாஜகவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மாநில பாஜக தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், மற்றொரு எம்.எல்.ஏ. சங்கர் ஆகியோர் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்திக்க புதன்கிழமை வந்திருந்தனர்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால், அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் வந்தனர். அங்கு தலைமைச் செயலர் அஸ்வனிகுமாரை சந்தித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து மனு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை செப். 11-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் செப். 18-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை ஏற்று பேரவைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அனுமதித்தார்.
இந்த நிலையில், இறுதித் தீர்ப்பு வந்த பின்னர்தான் இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.