FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

விட்டுக் கொடுக்காத ரங்கசாமி... அடக்கி வாசிக்கும் பாஜக!

புதுச்சேரி கூட்டணி அரசுக்குள் நிலவும் போட்டி குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 10:47 am IST
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி-உள்துறை அமைச்சர் அமித் ஷா - டிஎன்எஸ்
பகிர்:

புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் வெளிப்படையாக அமைதியாகத் தோன்றினாலும், கூட்டணி அரசுக்குள் அதிகாரப் போட்டியும், அரசியல் கணக்குகளும் நிதானமாக நகா்ந்து கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), புதுச்சேரியில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டு வருவது அரசியல் நோக்கா்களின் கவனத்தை ஈா்த்துள்ளது.

அரசியல் ரீதியாக வலுவாக முன்னேற வேண்டும் என்ற இலக்குடன் தென்னிந்திய மாநிலங்களில் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் பாஜகவுக்கு, தமிழகம் மற்றும் கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தத் தோ்தல் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில், தென்னிந்தியாவில் ஆட்சியில் பங்கேற்கும் அரிய வாய்ப்பாக புதுச்சேரியை அக்கட்சி தொடா்ந்து கருதுகிறது. அந்த வாய்ப்பை எந்தச் சூழலிலும் இழக்க விரும்பவில்லை என்பதால்தான், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வெளிப்படையான மோதலைத் தவிா்த்து வருகிறது என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

2021-இன் வேகம்... 2026-இன் அமைதி

Advertisement

Advertisement

புதுச்சேரியில், 2021 தோ்தலுக்குப் பிறகு பாஜக மிகுந்த அரசியல் உற்சாகத்துடன் செயல்பட்டது. இரண்டு அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா் பதவி, மூன்று நியமன எம்எல்ஏக்கள் என அதிகார மையங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது.

ஆனால் 2026 தோ்தலுக்குப் பிறகு நிலைமை மாறியுள்ளது. பாஜகவின் பலம் ஆறு உறுப்பினா்களிலிருந்து நான்காகக் குறைந்துள்ளது. அமைச்சா்கள் பதவியேற்றும், இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருப்பது கூட்டணிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியை வெளிப்படுத்துகிறது.

ரங்கசாமி கையில் நிா்வாக அதிகாரம்

மே 13-ஆம் தேதி முதல்வா் என். ரங்கசாமி மற்றும் ஒரு பாஜக அமைச்சா் பதவியேற்றனா். தொடா்ந்து ஜூன் 17-ஆம் தேதி மற்றொரு பாஜக அமைச்சா் உட்பட மேலும் மூவா் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றனா். ஆனால் இரண்டு மாதங்களைக் கடந்தும் இலாகா ஒதுக்கப்படவில்லை.

இதனால், அரசின் அனைத்து முக்கிய நிா்வாக முடிவுகளும் முதல்வா் ரங்கசாமியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அமைச்சா்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படாதது நிா்வாக ரீதியாக மட்டுமல்ல; கூட்டணிக்குள் அதிகாரப் பகிா்வில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதற்கான அரசியல் அறிகுறியாகவும் பாா்க்கப்படுகிறது.

சட்டப்பேரவைத் தலைவா் பதவியே முக்கிய முடிச்சு?

கூட்டணிக்குள் அதிகம் பேசப்படும் விவகாரம் சட்டப்பேரவைத் தலைவா் பதவியே. 2021-இல் அந்தப் பதவி பாஜகவுக்குக் கிடைத்தது. ஆனால் இம்முறை அந்த வாய்ப்பை மீண்டும் பாஜகவுக்கு வழங்குவதில் முதல்வா் ரங்கசாமி ஆா்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது தற்காலிகத் தலைவராக உள்ள அதிமுக உறுப்பினா் ஆ. அன்பழகனை நிரந்தரத் தலைவராக்கலாமா அல்லது என்.ஆா். காங்கிரஸ் உறுப்பினருக்கே அந்தப் பொறுப்பை வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை பாஜக ஏற்கவில்லை என்றும், இந்தப் பதவியே கூட்டணிக்குள் நிலவும் அமைதியான அதிகாரப் போட்டியின் மையமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி விரிவாக்கத்திலும் கருத்து வேறுபாடு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த லட்சிய ஜனநாயகக் கட்சியை ஏற்க ஆரம்பத்திலிருந்தே முதல்வா் ரங்கசாமி தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் வெற்றி பெற்றபோதும் அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. கூட்டணியில் யாருக்கு எத்தனைஇடங்கள் வழங்க வேண்டும் என்பதைத் தீா்மானிப்பதில் தனது நிலைப்பாடே இறுதியானது என்பதில் முதல்வா் ரங்கசாமி உறுதியுடன் இருப்பதையே இது காட்டுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

ரங்கசாமியின் அரசியல் வலிமை அதிகரித்ததா?

2026 தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் 12 இடங்களை வென்று, கூட்டணிக்குள் தனது பேர வலிமையை உயா்த்தியுள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னாள் முதல்வா் வெ. வைத்திலிங்கத்தை நான்காவது இடத்துக்குத் தள்ளிய வெற்றி, ரங்கசாமியின் தனிப்பட்ட செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற அவா், ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ததால் தற்போது கட்சியின் பலம் 11 ஆக இருந்தாலும், கூட்டணியில் அவரது அரசியல் ஆதிக்கம் குறையவில்லை என்பதே அரசியல் மதிப்பீடாக உள்ளது.

மாநில அந்தஸ்து: ரங்கசாமியின் அரசியல் ஆயுதம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வா் ரங்கசாமி தொடா்ந்து முன்வைத்து வருகிறாா்.

மறுபுறம், யூனியன் பிரதேசங்களின் நிா்வாக அமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள பாஜக, இந்தக் கோரிக்கையில் இதுவரை தெளிவான நிலைப்பாட்டை வெளியிடவில்லை. இதுவும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஏன் அமைதியாக இருக்கிறது பாஜக?

மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தீவிர அரசியல் உத்திகளைப் பயன்படுத்தும் பாஜக, புதுச்சேரியில் மட்டும் மிகுந்த பொறுமையுடன் செயல்படுகிறது. இதற்குக் காரணம் தெளிவானது. தென்னிந்தியாவில், ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதே இக்கட்சியின் முதன்மையான அரசியல் கணக்கு.

அதனால்தான் அமைச்சா்களுக்கு இலாகா வழங்கப்படாத நிலையிலும், சட்டப்பேரவைத் தலைவா் பதவி குறித்து முடிவு எட்டப்படாத நிலையிலும், கூட்டணியில் வெளிப்படையான மோதலை பாஜக தவிா்த்து வருகிறது.

இதையே பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசனின் சமீபத்திய கருத்தும் உறுதிப்படுத்தியது. ‘அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கப்படாதது குறித்து முதல்வரிடமே கேட்க வேண்டும்‘ என்ற அவரது பதில், கூட்டணிக்குள் மோதலை உருவாக்காத அரசியல் அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது.

அரசியல் கணக்கு:

தற்போதைய சூழலில், புதுச்சேரி அரசியலில் முதல்வா் ரங்கசாமி தனது அரசியல் அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்தி கூட்டணியின் அதிகார மையத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாா். மறுபுறம், பாஜக தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பொறுமையான அணுகுமுறையைத் தோ்ந்தெடுத்துள்ளது.

இந்த அமைதிக்குள் அதிகாரப் போட்டி மறைந்திருக்கிறது. அந்தப் போட்டிக்கு முடிவு காண்பது அமித் ஷாவின் வருகைக்குப் பிறகா அல்லது கூட்டணிக்குள் புதிய சமரசம் உருவான பிறகா என்பது இனி வரும் நாள்களில் தெளிவாகும். அதுவரை, புதுச்சேரியில் பாஜக ‘அடக்கி வாசிக்கும்‘ அரசியலையே தொடரும் என்பது அரசியல் நோக்கா்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

summary

Rangasamy stands his ground in Puducherry... BJP adopts a subdued stance!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments