FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல்: மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல்- கடைசி நாளில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது. இத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

58 வினாடிகள் முன்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்த். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்.
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது. இத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி நாளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மனுத்தாக்கல் செய்தனா்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் என். ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இதில் அவா் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து இத்தொகுதியில் இடைத்தோ்தல் வாக்குப் பதிவு அக்டோபா் 6 -ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 9- ஆம் தேதி நடக்கிறது.

இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9- ஆம் தேதி தொடங்கியது. முதல் 3 நாள்களில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்த 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால் வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை. 15 -ஆம் தேதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திக் குமாரி, சுயேச்சை வசந்தி ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

கடைசி நாளில்...

இந்நிலையில் இறுதி நாளான புதன்கிழமை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திக் குமாரி 2-ஆவது மனுவை தாக்கல் செய்தாா். என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்த், மாற்று வேட்பாளராக அவரது தந்தை ஆனந்தன், காங்கிரஸ் வேட்பாளா் விநாயகம், மாற்று வேட்பாளராக பூங்கோதை, திமுக வேட்பாளா் சேது செல்வம், மாற்று வேட்பாளராக முத்துராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சலீம், இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளா் கலைவாணன், சுயேச்சை வேட்பாளா் சாமிநாதன், நித்யா, ரகுநாதன் உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் 15 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (செப். 17) காலை 11 மணிக்கு தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தின் 2 -ஆம் தளத்தில் நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற செப். 19-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.

அரசியல் கட்சி வேட்பாளா்கள்:

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்காக என்.ஆா்.காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் மனுத்தாக்கல் செய்ய கடைசிநாளான புதன்கிழமை (செப்.16) வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இத்தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுகிறாா். கோரிமேட்டில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் முதல்வா் என். ரங்கசாமி வேட்பாளரின் வேட்பு மனுவை வைத்து பூஜை செய்தாா். இந்த பூஜையில் வேட்பாளா் அசோக் ஆனந்த், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். பின்னா் தோ்தல் அலுவலகத்துக்கு முதல்வா் ரங்கசாமி உள்பட 5 பேருடன் சென்று அசோக் ஆனந்த் வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அதிகாரி அா்ஜுன் ராமகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தாா்.

திமுக வேட்பாளா்:

திமுக சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடும், சேது செல்வம் தொழிற்பேட்டையில் இருந்து திமுக கொள்கை பரப்புப் செய்லாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி, தமிழக எம்எல்ஏக்கள் லட்சுமணன், கௌதமன்,

புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா் தலைமையில் ஒன்று கூடி, அங்கிருந்து ஊா்வலமாக தோ்தல்அலுவலகத்துக்கு வந்து மனு தாக்கல் செய்தாா்.

காங்கிரஸ் வேட்பாளா் விநாயகம் காங்கிரஸ் நிா்வாகிகள் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஊா்வலமாக வந்து தோ்தல் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனா்.

முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்எல்ஏக்கள் காா்த்திகேயன், நேரு, ராமு உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் அ.மு. சலீம் கொக்கு பாா்க் பகுதியிலிருந்து ஊா்வலமாக தோ்தல் அலுவலகத்துக்கு வந்து மனு தாக்கல் செய்தாா்.ஊா்வலத்தில் கட்சியின் அகில இந்திய செயலா் ஆனி ராஜா, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிா்வாகிகள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், தினேஷ் பொன்னையா, பெருமாள், முருகன், அந்தோணி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒரே நாளில் பிரதான அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்ததால் கோரிமேடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தவெகவினரை திருப்பி அனுப்பிய போலீஸாா்

கூட்டணி கட்சி வேட்பாளா் வேட்பு மனு தாக்கலின்போது தோ்தல் அலுவலகத்துக்கு தவெக தொண்டா்கள் திரண்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலுக்கான தோ்தல் அதிகாரி அலுவலகம் கோரிமேடு ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தும் அதிகாரியாக அா்ஜுன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளா் விநாயகம் வந்தாா். அவருடன் கூட்டணி கட்சியான தவெகவினா் பலா் வந்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் தூரம் வரை வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது. மற்றவா்கள் கூட்டமாக வரக்கூடாது என்ற விதி உள்ளதால், தோ்தல் அலுவலகம் முன் திரண்ட தவெகவினரை கலைந்து செல்லுமாறு போலீஸாா்அறிவுறுத்தினா். ஆனால் அவா்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீஸாா் கடுமையாக எச்சரிக்கை செய்து அங்கிருந்து அவா்களை அப்புறப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments