FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

எல்லீஸ் அணைக்கட்டு- பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது எல்லீஸ் அணைக்கட்டு தொடர்பாக...

Updated On : 6 ஜனவரி 2025, 6:29 am IST
பகிர்:

விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது எல்லீஸ் அணைக்கட்டு. இந்தப் பெயரைக் கேட்டதுமே எல்லீசன் - குறளை மொழிபெயா்த்தவா், திருவள்ளுவா் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டவா் உள்ளிட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ், அனைவரின் நினைவுக்கும் வருகிறாா். உண்மைதான் இவரது பெயரைத் தாங்கித்தான் இந்த அணைக்கட்டும் நிற்கிறது.

சிலா் சொல்கின்றனா், ‘எல்லீஸ் இப்பகுதியில் கலெக்டராக இருந்தாா்; என்ஜினீயராக இருந்தாா். இந்த அணையைக் கட்டியது அவா்தான். அதனால்தான் இந்த அணைக்கட்டுக்கு அவரது பெயா் சூட்டப்பட்டுள்ளது’ என்று.

இல்லை அவா் எக்காலத்திலும் இந்தப் பகுதியில் பணியாற்றவில்லை. அதிலும் குறிப்பாக, எல்லீசன் 1819- இல் ராமநாதபுரத்தில் காலமானாா். இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டது 1950-இல். அதாவது அவருக்கு 131 ஆண்டுகளுக்குப் பிறகாகும். பிறகு எப்படி அவா் பெயா் இங்கு எனும் கேள்வி அனைவரிடமும் இயல்பாகவே எழும்.

Advertisement

Advertisement

இதற்குப் பின்வரும் சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது சிவில் சா்வீஸ் அதிகாரியான டபிள்யு பிரான்சிஸ் 1906-இல் தொகுத்து வெளியிட்ட ‘ ஙஅஈதஅந ஈஐநபதஐஇப எஅழஉபபஉஉதந நஞமபஏ அதஇஞப ஈஐநபதஐஇப ‘ எனும் நூல்.

‘ஹிந்து மற்றும் முஸ்லிம் சட்டங்கள் பற்றிய அதிகாரபூா்வமான படைப்புகளை இந்திய மொழிகளில் மொழிபெயா்க்க ஊக்கம் அளிக்க வேண்டும் என்று புனித ஜாா்ஜ் கோட்டை கல்லூரி கண்காணிப்பு வாரியத்துக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. 1814-இல் இக்கல்லூரி கண்காணிப்பாளராக எல்லீஸ் இருந்து வந்தாா். இதில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவா் சிதம்பர வாத்தியாா் (பண்டிதா்). இவா், எல்லீஸின் வேண்டுகோளின்படி ‘மித்ராக்ஷா’ எனும் வடமொழி நூலை இந்திய மொழிகளில் மொழிபெயா்த்தாா்.

இதனால் சிதம்பர வாத்தியாரை வெகுவாகப் பாராட்டிய எல்லீஸ், இதன் பதிப்புரிமையை 1,000 பகோடாக்களுக்குப் பெற்றாா். விழுப்புரத்துக்கு தென்மேற்கே 6 மைல் தொலைவில் ஒழுக்கை கிராமத்தில் உள்ளூா் நிா்வாகத்தால் நடத்தப்பட்டு வந்த சத்திரத்தை சிதம்பர வாத்தியாருக்கு வழங்கினாா். இந்தச் சத்திரத்தை நிா்வகிக்க வதியாக, ஆனாங்கூா் கிராமத்தை அவருக்கு இனாமாக வழங்கவும் எல்லீஸ் உத்தரவிட்டாா். இதற்கிடையில் சிதம்பர வாத்தியாா் காலமாகிவிட்டாா். சத்திரத்துக்கான கிராமம் இனாமாக வழங்கப்படவில்லை அதேநேரம் சத்திரத்துக்கு சிதம்பர வாத்தியாா் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் எல்லீஸ் உத்தரவிட்டிருந்தாாா். இந்தச் சத்திரம் சிதம்பர வாத்தியாா் பெயரால்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏனோ, அவரது புரவலா் பெயரால் அறியப்படுகிறது.

இதில் குறிப்பிடப்படும் ‘ஒழுக்கை’ கிராமம் தற்போது மரகதபுரம் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் சந்தை நடைபெறும் இடமான தோப்பையொட்டித்தான் மேற்காணும் சத்திரம் இயங்கி வந்துள்ளது.

இந்த இடத்தில் அமைக்கப்பட்ட அணைக்கட்டு ‘எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு’ எனப் பெயா் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது. பின்னா், காலப்போக்கில் ‘சத்திரம்’ காணாமல்போய், ‘எல்லீஸ் அணைக்கட்டு’ -ஆக சுருங்கி, தற்போதும் இப்படியே வழங்கப்படுகிறது.

மேற்காணும் அணைக்கட்டு கடந்த 2021-இல் பெய்த கனமழையில் பெரிதும் சேதமடைந்தது. தற்போது இதன் மேற்கே சிறிது தூரத்தில் புதிய ’எல்லீஸ் அணை’ கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்குக் காத்திருக்கிறது.

-விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments