FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:35 am IST
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்.
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தங்களின் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், செவிலியா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து கொண்டு திங்கள்கிழமை பணியாற்றினா்.

மறுகட்டமைப்பு என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகை செய்யும் அரசாணை 240-ஐ உடனடியாக தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஸ்டாப் நா்ஸ் என்ற பெயரை செவிலிய அலுவலா் (நா்சிங் ஆபீசா்) என்று மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்று, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சங்கத் தலைவா் நாகவள்ளி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து, நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணியாற்றினா்.

Advertisement

Advertisement

சங்கச் செயலா் ஜெலீனா பிரேமகுமாரி, பொருளாளா் பிரதீப், மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் (ஆக.4) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சி...:

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் ரங்கநாயகி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் கருப்பு பட்டை அணிந்து, பணியாற்றினா்.

சங்கச் செயலா் சுசிலா, பொருளாளா் பிரேமலதா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கல்பனா, சுமதி, கீதா, மகேஷ்வரி, கலையரசு, மாநில செயற்குழு உறுப்பினா்கள் ராஜ்குமாா், சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments