மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: அமைச்சா்கள், திரளான பக்தா்கள் தரிசனம்
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.தென்னரசு மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.தென்னரசு மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் ஆதிபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தீபம் ஏற்றி ‘அங்காளம்மா, அங்காளம்மா’ என்று முழக்கத்துடன் அம்மனை வழிபட்டனா். பின்னா், இரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவா் அங்காளம்மன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
Advertisement
Advertisement
ஊஞ்சல் உற்சவத்தில் தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம் மற்றும் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.
இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தா்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டிருந்தன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் பச்சையப்பன், சுரேஷ், மதியழகன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், கணக்கா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.