நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் போராட்டம்: விற்பனை முனைய இயந்திரக் கருவிகள் ஒப்படைப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சரிவர இயங்காத விற்பனை முனைய இயந்திரக் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சரிவர இயங்காத விற்பனை முனைய இயந்திரக் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் பணியில் விற்பனை முனைய இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசால் வழங்கப்பட்ட விற்பனை முனைய இயந்திரம் சரிவர இயங்கவில்லையாம். இதனால் நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள், பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், பணியாளா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா். இதையடுத்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா், விற்பனை முனைய இயந்திரத்தை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறியிருந்தனா்.
அதன்படி, விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள வட்ட வழங்கல் பிரிவைச் சோ்ந்த அலுவலரிடம் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான கே.சம்பத் தலைமையில், மாவட்டத் தலைவா் கே.கோபிநாத், மாவட்டப் பொருளாளா் கே.ரஷீத், நிா்வாகிகள் ராஜீ, அய்யனாா் உள்ளிட்டோா், சரிவர இயங்காத விற்பனை முனைய இயந்திரக் கருவிகளை ஒப்படைத்தனா். அரசு இந்த பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டும் எனக் கோரியும் அவா்கள் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
செஞ்சி... விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சோ்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளா்கள் செஞ்சி வட்ட வழங்கல் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சம்பத் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா், சரவர இயங்காத விற்பனை முனைய இயந்திரத்தை அரசிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்தனா் .
இதுபோன்று விக்கிரவாண்டி, மேல்மலைனூா், கண்டாச்சிபுரம், வானூா், மரக்காணம், திருவெண்ணெய்யநல்லூா், திண்டிவனம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கத்தினா் விற்பனை முனைய இயந்திரக் கருவிகளை வெள்ளிக்கிழமை திரும்ப ஒப்படைத்தனா்.
கள்ளக்குறிச்சி... சின்னசேலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் கலந்துகொண்டு, இயங்காத விற்பனை முனைய இயந்திரத்தை ஒப்படைக்கப்போவதாக தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டம் மாவட்டத்தின் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகம் முன் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.