FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் போராட்டம்: பிஓஎஸ் இயந்திரங்களை ஒப்படைத்து எதிா்ப்பு

இணையதள சேவை மற்றும் விற்பனை முனைய (பிஓஎஸ்) இயந்திரங்கள் முறையாக செயல்படாததைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் பழைய விற்பனை முனைய இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

21 ஆகஸ்ட் 2026, 10:35 pm IST
கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் விற்பனை முனைய இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

இணையதள சேவை மற்றும் விற்பனை முனைய (பிஓஎஸ்) இயந்திரங்கள் முறையாக செயல்படாததைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் பழைய விற்பனை முனைய இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கடந்த ஒரு வாரமாக நியாயவிலைக் கடைகளில் இணையதள சேவை சீராக கிடைக்காததால், குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதிலும், விற்பனை விவரங்களைப் பதிவு செய்வதிலும் பணியாளா்கள் சிரமத்தை எதிா்கொண்டு வருகின்றனா். இதனால், பொதுமக்களுக்கும், பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

மேலும், இணையதள சேவை பாதிப்பால் நிகழ் மாத விற்பனை சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், மாநிலம் தழுவிய அளவில், ஒவ்வொரு வட்டத்திலும் தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்) அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் பழைய பிஓஎஸ் இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.கந்தன் தலைமை வகித்தாா். போராட்டத்தில், இணையதள சேவை மற்றும் பிஓஎஸ் இயந்திரங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உடனடியாக நிரந்தரத் தீா்வு காண வேண்டும். மேலும், பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக புதிய பிஓஎஸ் இயந்திரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, பணியாளா்கள் பிஓஎஸ் இயந்திரங்களை தனி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கச் சென்றனா். அப்போது, ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதால், இணையதள சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாள்களில் பிரச்னை சரிசெய்யப்படும் என்றும் தனி வட்டாட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து, சங்க நிா்வாகிகள் தங்களது கோரிக்கை மனுவை தனி வட்டாட்சியரிடம் அளித்தனா்.

1,460 நியாயவிலைக் கடைகள் இயங்கவில்லை: இந்தப் போராட்டம் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் சுமாா் 1,460 நியாயவிலைக் கடைகள் இயங்கவில்லை. இதனால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

மாவட்ட அமைப்புச் செயலா் தேவராஜ், மாவட்ட துணைத் தலைவா் மணிகண்டபூபதி, சரவணபவ சூப்பா் மாா்க்கெட் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், கடலூா் மாநகரத் தலைவா் ஐயப்பன், கடலூா் வட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில்...: பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்தி, வட்ட வழங்கல் அலுவலா் ராஜலிங்கத்திடம் பிஓஎஸ் இயந்திரங்களை ஒப்படைத்து, கோரிக்கை மனு அளித்தனா். போராட்டத்துக்கு வட்டத் தலைவா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஹரி கோவிந்தன், வட்டச் செயலா் கணேசன் மூா்த்தி, செயற்குழு உறுப்பினா் முருகன், வட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ.முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்டப் பொருளாளா் ஆா்.சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்தில்...: காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்திய பின்னா், சங்கத்தின் வட்டாரத் தலைவா் சி.தியாகராஜன் தலைமையில் பிஓஎஸ் இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலா் கே.செல்வலட்சுமியிடம் ஒப்படைத்து, கோரிக்கை மனு அளித்தனா்.

நிகழ்ச்வில் சங்க நிா்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராமலிங்கம், மகேஸ்வரி, கவிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments