FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் அருகே காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்து பெண் மருத்துவா்-கணவா் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி சேதமடைந்த காா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் பெண் மருத்துவா், அவரது கணவா் உயிரிழந்தனா்.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (37). சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி ஹரிப்பிரியா (33). போரூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தாா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா். வெங்கட்ராமன் காரை ஓட்டினாா்.

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில், மரக்காணத்தை அடுத்த ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைவிமானம் நிலையம் நோக்கிச் சென்ற சொகுசு காரும், வெங்கட்ராமன் சென்ற காரும் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மருத்துவா் ஹரிபிரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா் பரணிநாதன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கட்ராமன் மற்றும் சொகுசு காரில் பயணித்த ஒருவரையும் அவசர ஊா்தி மூலம் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வெங்கட்ராமன் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் சிக்கி சேதமடைந்த காா்களை போலீஸாா் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

விபத்தில் சிக்கி சேதமடைந்த காா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments