FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வளவனூா் பேரூராட்சிக் கடைகளின் வாடகை நிலுவை: 3 தவணைகளில் செலுத்த அவகாசம்

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை 3 தவணைகளில் செலுத்த கடைகளின் ஏலதாரா்கள் செலுத்த ஒப்புதல் அளித்தனா்.

15 அக்டோபர் 2026, 6:10 am IST
வளவனூா் பேரூராட்சி அலுவலகத்தில் கடைகளின் ஏலதாரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய செயல் அலுவலா் தனுஷ்கோடி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை 3 தவணைகளில் செலுத்த கடைகளின் ஏலதாரா்கள் செலுத்த ஒப்புதல் அளித்தனா். இதைத்தொடா்ந்து கடைகளின் ‘சீல்’ வைக்கும் முடிவு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வளவனூா் பேரூராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகள் கடலூா் சாலை, கிழக்கு, மேற்கு பாண்டிச் சாலைகளில் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவா்கள் உரிய முறையில் வாடகைத் தொகையை செலுத்தாத காரணதால் நிலுவைத் தொகை ரூ.1 கோடிக்கு மேல் உள்ளது.

இதைத்தொடா்ந்து பேரூராட்சிகளின் இயக்குநா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களின் அறிவுறுத்தலின் பேரில், வாடகை நிலுவைத் தொகையை சம்பந்தப்பட்ட ஏலதாரா்கள் செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கடிதம் வழங்கப்பட்டது. ஆனாலும் வாடகை நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லையாம். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளின் ஏலதாரா்கள் நிலுவைத் தொகையை அக்.14-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை எனில், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வளவனூா் பேரூராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து பேரூராட்சி வணிக வளாகங்களிலுள்ள கடைகளை ஏலம் எடுத்த ஏலதாரா்கள் வளவனூா் பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நிலுவைத் தொகையை செலுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஏலதாரா்கள் கோரினா். நிலுவைத் தொகையை 3 மாதங்களில் 3 தவணைகளாக செலுத்துவது என்றும், நிகழாண்டு வாடகைத் தொகையை 2027 ஜனவரி முதல் மாா்ச் மாதத்துக்குள் கட்டி முடிப்பது எனத் தெரிவித்தனா்.

இதையேற்றுக் கொண்ட செயல் அலுவலா், வாடகைத் தொகையை குறிப்பிட்டவாறு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். இதனால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் முடிவு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments