ஒருநாள் ரெமோ... இன்னொரு நாள் அந்நியன்: முன்னாள் காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன்!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் முன்னாள் காதல் குறித்து பேச்சு...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் முன்னாள் காதலர் குறித்து பேசியது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நீண்ட காலமாக நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்துப் பேசப்பட்டு வந்த நிலையில்தான், நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.
அதில், "இத்தனை புகைப்படங்களை ஒரே நேரத்தில் பகிர்ந்ததற்கு மன்னிக்கவும். ஒப்புதல்கள், பாடல்களைத் தேர்ந்தெடுப்பது அல்லது வேறொருவரின் குறிப்புக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றால், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக மாறுகிறது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்," என்ற வாசகத்துடன் அவர் தன்னுடைய பல புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனால், துருவ் விக்ரமும் அனுபமாவும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இருவரும் காதலிப்பதாக கூறவில்லை என்றாலும் அதனை மறுக்கவும் செய்யவில்லை என்பதால் அனுபமாவுக்கு பிரேக்-அப் என ரசிகர்கள் அப்பதிவை வைரலாக்கினர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை அனுபமா தன் காதல் குறித்து பேசியுள்ளார். அதில், “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.
அந்த காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, என் உடல் எடையைக் குறைத்தேன்.
எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் போராட்டங்களும் உள்ளன. முழுமையாகக் குணமடைந்த பிறகே அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன்.
முதலில் நார்ஸிஸ்ட் அபியூஸ் (Narcissist abuse) என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உங்களைக் காதலிக்கும் நபர் மெல்ல மெல்ல உங்களின் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு அதனை அன்புடன் தொடர்புப்படுத்தி உளவியல் ரீதியாக உங்களை ஆளத் தொடங்குவார்கள். வெளிப்படையாக இப்படி இரு; அப்படி இரு எனச் சொல்லாமல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்களை மாற்றுவதில் மிகுந்த நிபுணர்களாக இருப்பார்கள். உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை நான் சுடிதார் அணிந்தபோது அவர், ‘நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். இப்போதுதான் மனைவியாகத் தோன்றுகிறாய்’ என்றார். நான் சுடிதார்களாக வாங்கிக் குவித்தேன்.
பின், உணவு மேஜையில் அரட்டையடித்து பேசிச் சாப்பிடும் என்னிடம், நீ அப்போது அமைதியாக இருந்தது நன்றாக இருந்தது என்றார். உடனே, அவர் என் அமைதியை விரும்பிகிறார் என நான் உணவு மேஜையில் பேசுவதை நிறுத்தினேன். பின், கை இல்லாத ஆடை (ஸ்லீவ் லெஸ் - sleeve less) அணிந்த போது, வெளியே மிகவும் வெப்பமாக இருக்கிறது. இதனை அணிய வேண்டுமா? எனக் கேட்டார். நான், அய்யோ என் மீது எவ்வளவு அக்கறையா என அதனைத் தவிர்த்தேன். தொடர்ந்து, இன்று என்ன ஆடை அணிகிறாய் என்பதைக் கேட்பார். நான் அதனைப் புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பேன். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்தாலும், ‘இது சரியாக இருக்கிறது என நினைக்கிறாயா?” எனக் கேட்டு அதனை உளவியலாக சிந்திக்க வைத்து பதிவை நீக்க வைப்பார்.
நினைத்துப் பாருங்கள், ஒருநாள் அவர் ரெமோ. அப்படியொரு காதல்... நாம் மிக கொடுத்த வைத்த ஆள் என்கிற அளவுக்கு கனவுகள் துளிர்க்கும். அடுத்த நாள், அந்நியனாகிவிடுவார்; மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். பின், அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார். நடிகை மடோனா செபாஸ்டியன் தன் நார்ஸிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசிய போதுதான், நாமும் இப்படியான சூழ்நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை அனுபமா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் இளம் நடிகரின் குணங்களைக் குறித்து பேசியது பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அனுபமா பகிர்ந்தவை முக்கியமான விஷயம் என அந்த நடிகரைத் தாக்கி வருகின்றனர்.
Actress Anupama Parameswaran's remarks about her ex-boyfriend have sparked a debate.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.