விஜய்யை மிஸ் பண்ணப் போறோம்! ஜன நாயகன் குறித்து த்ரிஷாவின் அம்மா!
ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்த பிறகு த்ரிஷா தாய் கருத்து...
ஜன நாயகன் திரைப்படத்தை மகிழ்ச்சியுடன் கண்டு கழித்ததாக நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன், உலகம் முழுவதும் 8,000 திரைகளில் இன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், முதல் காட்சியில் கண்டு ரசிக்க பல திரைப் பிரபலங்களும் விஜய்யின் ரசிகர்களும் திரையரங்குகளில் இன்று காலையே குவிந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்குக்கு இன்று காலை 11 மணியளவில் தனது தோழிகளுடன் வந்த த்ரிஷா, ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்தார்.
இதற்கிடையே, ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
படம் குறித்து பேசிய அவர், “படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம். படம் மிகவும் நன்றாக இருந்தது. இது அவருடைய கடைசிப் படம் என்பது வருத்தமளிக்கிறது. நாம் அவரை மிஸ் செய்யப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு படம் வெளியாகியுள்ளதால், படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் எனத் திரையிடப்பட்டது. இந்த காட்சி வரும்போது விஜய் ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே, தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்திருந்த படம் ஜன நாயகன். தேர்தலுக்கு முன்னதாக, ஜன. 9 ஆம் தேதியே இப்படம் வெளியாகவிருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தவெக தலைவர் என்ற முறையில், விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்து மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக தனிப்பெருங்கட்சியாக வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
தவெக தலைவராக படம் வெளியாவதில் சிக்கல்களை சந்தித்திருந்த ஜன நாயகன், தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு இந்த நாள் திருவிழாவாக அமைந்துள்ளது.
நடிகராக விஜய் நடிப்பில் வெளியான கடைசிப் படமாக ஜன நாயகன் பார்க்கப்படுவதால், அவரது ரசிகர்கள் பலரும், அதனை திரையரங்கில் சென்று ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகிறார்கள்.
We are going to miss Vijay - Trisha's mother speaks about the Jana Nayagan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.