FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விவாதமேடை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணியில் தடியடி குறித்து வாசகர்களின் கருத்துகள் சில...

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணியில் தடியடி நடத்தப்பட்டது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Updated On : 29 ஜூலை 2026, 6:31 am IST
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணியில் தடியடி
பகிர்:

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணியில் தடியடி நடத்தப்பட்டது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நேர்மையற்ற செயல்

விலங்குகளை வதை செய்தாலே கண்டிக்கும் நாம், தடியடியை ஆதரிக்க முடியாது. நேர்மை தவறிய அரசின் நேர்மையற்ற செயலே தடியடி. காவல் துறையின் கடமை தவறிழைத்தவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுதான். அவர்களாகவே தடியடி நடத்தி பின்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்பது சரியல்ல. மக்களாட்சியில் மக்களின் கருத்துகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செவிசாய்த்துக் கேட்கவில்லை என்றால், ஊர்வலம், போராட்டம் மூலமாகத்தான் அந்தக் கருத்தை வெளிப்படுத்த முடியும்.

Advertisement

Advertisement

நா. இராசமோகன், முத்துப்பேட்டை.

ஏற்புடையதல்ல

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தைத் தொடங்கியபோதே பிரதமர், உள்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி தவறுக்குப் பொறுப்பேற்றிருந்தால் இந்தத் துயரங்கள் தடுக்கப்பட்டிருக்கும். நீட் தேர்வில் பல முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலப் பிரச்னை. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் நடத்தப்பட்ட தடியடி ஏற்புடையதல்ல.

பி.சுந்தரம், வெண்ணாந்தூர்.

இதுவே கடைசியாக...

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது வேதனையளிக்கிறது. அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தும் போராட்டக்காரர்கள் சென்றது ஏன்? அவர்களுடன் போராட்டத்துக்கு தொடர்பில்லாதவர்களும் ஊடுருவியது எப்படி? ஜனநாயக நாட்டில் சட்டப்படி அனுமதி வாங்கித்தான் போராட முடியும். காயமடைந்துள்ள நூற்றுக்கணக்கான காவல் துறையிருக்கு போராட்டக்காரர்களின் பதில் என்ன? போராட்டம் என்ற பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறாக அமையும். இனி இதுவே கடைசியாக இருக்கட்டும்.

ஆர். சத்தியநாராயண மூர்த்தி, சொக்கநாதன்பட்டி.

அரசின் பலவீனம்

வினாத்தாள் கசிவு முறைகேட்டுக்கு பொறுப்பாளியாக வேண்டியது தர்மேந்திர பிரதான். அவர் அடையாளம் காணப்பட்ட பிறகும் அசைந்து கொடுக்காத மத்திய அரசின் போக்கு கரட்டு கம்பு என்றால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் முரட்டு கோடாரியாகி விட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நிகழுமோ? என்ற சூழலில் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் தடியடி என்ற அளவில் சரியானதுதான். பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் சூழலை உருவாக்காமல் நழுவ விட்டது மத்திய அரசின் பலவீனம்.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

ஆரோக்கியமானதல்ல

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்கெனவே அறிவித்ததன் பேரில் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். மத்திய அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறையை ஏவி, தடியடி நடத்துவது என்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல.

மவ்லவீ மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

கட்சியை வளர்க்க...

எந்த ஓர் அரசாக இருந்தாலும் இதைத்தான் செய்திருக்கும். தடியடி நடத்தாவிட்டால் பல்லாயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்திருப்பார்கள். ஒரு சில கட்சிகள் மாணவர்களைத் திரட்டி இப்படி ஏதாவது ஒரு பிரச்னைக்கு எதிராகப் போராடி அரசியலுக்கு வர விரும்புவது போலத்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செயலும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஆம் ஆத்மி, அசாம் கண பரிஷத் கட்சிகளைச் சொல்லலாம். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைப் பிரபலப்படுத்துவதற்கும் வளர்ப்பதற்குமாகத்தான் இந்தப் போராட்டம்.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

வெளிநாட்டு சதி

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியில் மோடி அரசுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் தீய நோக்கம் இருந்தது என்பதுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பங்கும் இதில் இருந்தது என்பதும் தெளிவு. எந்தவித தேவையும் இல்லாத சூழலில் பேரணிகளும்,போராட்டங்களும் நடைபெற்றுள்ளது என்பது உள்நோக்கம் கொண்டதே என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இதில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளும் சேர்ந்து பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக சதிசெய்கின்றனர் என்பதே உண்மை.

டால்மியா-சுவாமிநாதன், திருவானைக்கோவில்.

தடுக்க முயற்சி

எந்தவொரு போராட்டத்தையும் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் என்று நினைப்பதால், அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாள்களாக தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் பேரணியில் தடியடி நடத்தப்பட்டு அது உயர்நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எந்தவொரு போராட்டமும் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது இல்லை. அந்த வகையில் இந்த தடியடியும் அதில் ஓர் அங்கமாக உள்ளது.

அ.குணசேகரன், புவனகிரி.

எல்லை மீறியதால்...

இந்திய அரசின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைக்க, வெளிநாட்டு சதி வலையில் உருவாகி இருப்பதுதான் இந்த திடீர் கட்சி. நீட் வினாத்தாள் குளறுபடிகள் கண்டனத்துக்குரிய விஷயம்தான். சட்டப்படி அதற்கான தண்டனைப் பெற்றுத் தருவதற்கான செயல்கள் நீதிமன்றத்தில் நடந்தும் வருகின்றன. இந்த நிலையில், மாணவர்களைத் தவறாக வழி நடத்தி தங்களது அரசியல் லாபத்துக்காக கட்சிகள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி, காவல் துறையினர் மீது கற்களை வீசி எல்லை மீறியதால்தான், காவல் துறையும் தடியடி போன்ற செயல்களில் ஈடுபட்டது. காவல் துறையை மட்டும் குறை சொல்லுவது நேர்மையற்ற செயல்.

அனன்யா, பொள்ளாச்சி.

கவனக் குறைவே காரணம்

தில்லியில் சிஜேபி கட்சியினருடன் மாணவர்களும் சேர்ந்துதான் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் பேரணி நடத்தினர். அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவோ, உரிய பதில் அளிக்கவோ அரசு தயாராக இல்லை என்பதை நாடாளுமன்றப் பாதுகாப்பு எனக்கூறி, துணை ராணுவத்துடன் காவலர்களும் குவிக்கப்பட்டு மருத்துவமனையில் மாணவர்களைச் சேர்க்கும் அளவுக்குத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தலைநகரில் நடக்கும் வழக்கமான போராட்டம்தான் என்ற அரசின் கவனக்குறைவே இதற்குக் காரணம்.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

கொடுமையானது

ரயில் விபத்துக்கு தானே பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி. நீட் தேர்வு வினாத் தாள் கசிவு என்பது கடந்த பத்தாண்டுகளில் பல முறை நிகழ்ந்துள்ளது. யாரும் கைதாகவில்லை; பொறுப்பேற்கவும் இல்லை. உரிமைக்காக அற வழியில் போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி என்பது மிகவும் கொடுமையானது. கல்வி அமைச்சர் பொறுப்புடன் பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் ஏற்புடையது.

ஆ. லியோன், மறைமலைநகர்.

கண்டிக்கத்தக்கது

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதைக் கண்டித்து தில்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணியில் தடியடி நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அது போன்று அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட முயலும் போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுக்காமல் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் இது போன்ற போராட்டங்களையும், பேரணிகளையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதும் கண்டிக்கத்தக்கதே. நேர்மையான முறையில் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ராம், ஈரோடு.

வியப்பில்லை

எந்த ஒரு போராட்டத்தையும் அரசு விரும்பாத நிலையில், கல்விக் கொள்கைகளில் மாற்றம் தேவை என்றும், அது அனைத்து மக்களுக்கும் சமமான கல்வியாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நீட் தேர்வு, மறு தேர்வு என பல்வேறு குழப்பங்களைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது சித்தாந்தங்களுக்கு எதிராக இருக்கும் போராட்டக்காரர்கள் மீது ஆளும் மத்திய அரசு தடியடி நடத்தாமல் இருந்தால்தான் வியப்பு. எனவே அரசியலில் இது சாதாரணம்தான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

வேதனையளிக்கிறது

அமைதியாக நடைபெற்றிருக்க வேண்டிய போராட்டம் வன்முறையாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தில் கருத்து தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் சட்டம்}ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட வேண்டும். இந்தச் சூழலில், இனி நடைபெறும் தேசிய அளவிலான தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், எந்தவித முறைகேடும் இன்றி நடத்தப்

படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதை வரவேற்கிறோம். அது வெறும் அறிவிப்பாக இல்லாமல், நடைமுறையில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே மாணவர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.

சோம. இளங்கோவன், தென்காசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments