அறிவியல் ஆயிரம்: ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் தவிர்க்க முடியாதது அல்ல! காரணங்களும் தீர்வுகளும்...
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் / கீல்வாதம் ஏன் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி...
மூட்டு தேய்மானம்
வயதானால் முழங்கால் மூட்டு தேய்ந்துவிட்டது. வலி வருகிறது நடக்க முடியவில்லை என்று பொதுவாக நம்மவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். இது உண்மைதான். ஆனால் இதனை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீங்கள் முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் - கீல்வாதம் (osteoarthritis) என்பது ஒருவரின் இயங்கும் திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் தீவிரமாகப் பாதிக்கக்கூடும். ஆனால், அதன் தீவிரமடைதல் முற்றிலும் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது அல்ல. உடற்பயிற்சி, கால்தசைகளை வலுப்படுத்துதல், ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுதல், மேலும் சிறிதளவு உடல் எடையைக் குறைத்தல் ஆகியவை முழங்கால்களில் ஏற்படும் அழுத்தத்தைப் பெருமளவு குறைத்து, வலியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். அது தொடர்பான ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு உடற்பயிற்சிதான் சிறந்த சிகிச்சை, குறைக்கும் வழி என்று அறியப்பட்டுள்ளது.
கீல்வாதம் என்றால் என்ன?
Advertisement
Advertisement
கீல்வாதம் என்பது மிகவும் பொதுவான மூட்டு நோயாகும். எலும்புகளின் முனைகளுக்கு மெத்தை போன்ற பாதுகாப்பை வழங்கும் மென்மையான குருத்தெலும்பு காலப்போக்கில் தேய்ந்து போகும்போது இது ஏற்படுகிறது. இதனால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, வலி, விறைப்பு மற்றும் வீக்கம் உண்டாகிறது.
பொதுவான அறிகுறிகள்
· அசைவின்போது அல்லது அதற்குப் பிறகு மூட்டு வலி
· தூக்கத்திலிருந்து எழுந்த பிறகோ அல்லது சிறிது நேரம் உட்கார்ந்த பிறகோ ஏற்படும் விறைப்பு
· மூட்டைச் சுற்றி வீக்கமும் மென்மையும்
· நகர்த்தும்போது உராய்வு உணர்வு அல்லது படபடப்பு சத்தம்
· மூட்டு முழுமையாக அசைவதற்கு குறைவாக இருத்தல் அல்லது சிரமம்
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
சிறிய அளவிலான வாழ்க்கைமுறை மாற்றங்கள்கூட, வயதாகும்போது முழங்கால்களின் மீது ஏற்படும் அழுத்தத்தை வியப்பளிக்கும் அளவுக்குக் குறைக்கக் கூடும். உடலுக்குத் தரும் சின்ன சின்ன பயிற்சிகள், இந்த வேதனையை / வலியை கணிசமாகக் குறைக்கிறது. இதனை ஆய்வு மூலம் நிரூபித்தாகி விட்டது. உடற்பயிற்சிகள் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸை நம் வாழ்க்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைத் தடுக்கவும் உதவக்கூடும்.
முழங்கால் வலி
முழங்கால் வலி என்பது பலருக்கும் நன்கு அறிமுகமான ஒரு தீராத பிரச்னை என்றே கூறலாம். வயது அதிகரிக்கும்போது இது பொதுவாக, எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. தொடர்ந்து நீடிக்கும் முழங்கால் பிரச்னைக்கு / வலிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், அவற்றில் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis - கீல்வாதம்) ஆகும்.
குருத்தெலும்பு தேய்மானம்
முழங்கால் மூட்டில் உள்ள எலும்புகளுக்கு இடையே மென்மையான பாதுகாப்பை வழங்கும் பஞ்சு போன்ற குருத்தெலும்பு (cartilage), வயது ஆக ஆக, படிப்படியாகச் சிதைவடையும்போது/ தேய்மானம் ஏற்படும்போது, முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் உருவாகிறது. ஆரோக்கியமான குருத்தெலும்பு, முழங்கால் சீராகவும் மென்மையாகவும் இயங்குவதற்கு உதவுவதோடு, எலும்புகளையும் பாதுகாக்கிறது. இந்தப் பாதுகாப்பு அடுக்கு மெலிந்து வரும்போது, வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. காலப்போக்கில் அவை மேலும் தீவிரமடையவும் வாய்ப்புள்ளது.
இறுக்கம், விழும் அபாயம் & வாழ்க்கைத்தரம்
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் முழங்கால் வலியையும் இறுக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும். இதனால் ஒருவரின் உடல் செயல்பாட்டின் அளவு, கீழே விழும் அபாயம், மனநிலை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியவை எதிர்மறையாகப் பாதிக்கப்படலாம் என்று,செயின்ட் லூயிஸ் (St. Louis) நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை இல்லாத சிகிச்சை மற்றும் மறுவாழ்வியல் நிபுணத்துவம் பெற்ற உடலியக்க மருத்துவர் டாக்டர் அபிசெங் (Dr. Abby Cheng) தெரிவிக்கிறார்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் இயக்கத்தை மட்டும் பாதிப்பதில்லை
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸின் தாக்கம் மூட்டில் ஏற்படும் வலியைத் தாண்டியும் நீளக் கூடும். இயங்குவதில் சிரமம் ஏற்படுவதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் வருமான இழப்பும் ஏற்படலாம். மேலும், இது மக்களை உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பதிலிருந்து விலகச் செய்யக்கூடும். அதன் விளைவாக இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்ட கால நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் சாதாரணமானது
ஆனால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் மிகவும் பொதுவான நோயும்கூட. அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மிகவும் அடிக்கடி பாதிக்கப்படும் மூட்டு முழங்காலாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பொதுவாக வயது முதிர்வுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், பாதி அளவிலான நோயாளிகள் இன்னும் வேலை செய்யும் வயதிலேயே உள்ளவர்கள்.
"கால் தசைகள் பலவீனமாக இருப்பதும், உடல் எடை அதிகமாகவோ அல்லது உடல் பருமனாகவோ இருப்பதும் ஒருவருக்கு முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது" என்று டாக்டர் செங் கூறுகிறார்.
"பெண்கள், வயதானவர்கள், ஏற்கெனவே முழங்கால் காயம் ஏற்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தில் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் வரலாறு கொண்டவர்களுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்" என்றார்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள் முழங்கால் வலியைக் குறைக்க உதவும்
ஏற்கெனவே ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு, வலி மற்றும் இயங்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சமாளிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன், தேவையான நேரங்களில் மருத்துவச் சிகிச்சைகளையும் மேற்கொள்வது, நோய் மேலும் மோசமடைவதை மெதுவாக்க உதவக்கூடும்.
உணவும் உடற்பயிற்சியும் சிகிச்சை
"அதிக அளவில் தாவர அடிப்படையிலான உணவுகளையும், குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட அல்லது சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளையும் சாப்பிடுவது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. இதனால் அனைத்து மூட்டுகளிலும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸால் ஏற்படும் வலியைக் குறைக்க முடியும்" என்று செங் கூறினார். “முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸுக்கான பிற பொதுவான சிகிச்சைகளில் தொடைத் தசைகளை வலுப்படுத்துதல், போதுமான உடற்பயிற்சி இதற்கு உரிய ஆதரவு வழங்கும். அத்துடன் வலி/பிரச்னை கணிசமாகக் குறையும்
ஆங்கில மருந்துகள்
முழங்கால் மூட்டு வலி மிகவும் அதிகமாக இருந்தால் முழங்கால் ஆதரவுக் கருவிகளைப் பயன்படுத்துதல், அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், கார்டிசோன் மற்றும் பிற ஊசிகளைச் செலுத்திக் கொள்ளுதல் இந்த பிரச்னைக்கு உதவும். மேலும் சில நேரங்களில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸைச் சமாளிப்பதற்கான தனிநபருக்கேற்ற உத்திகளை உருவாக்குவதில் மருத்துவப் பராமரிப்பு நிபுணர்கள், நோயாளிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும். ஆரோக்கியமான மாற்றங்களைத் தொடங்குவதையும், அவற்றை நீண்ட காலம் தொடர்ந்து கடைப்பிடிப்பதையும் எளிதாக்கும் திட்டங்கள் மற்றும் பிற ஆதாரங்களுடனும் அவர்கள் மக்களை இணைக்க முடியும்.
சிறிய முன்னேற்றங்கள்கூட வியப்பளிக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உடல் எடை அதிகமாக உள்ள ஒருவரைப் பொருத்தவரை சுமார் 4-5 கிலோ உடல் எடையைக் குறைப்பது, ஒவ்வொரு அடியிலும் முழங்கால்களின் மீது விழும் அழுத்தத்தை சுமார் 20 கிலோ & ஆங்கில மருந்துகள் அளவுக்குக் குறைக்கக் கூடும் என்று செங் கூறுகிறார். இந்த எடைக் குறைப்பு/அழுத்தக் குறைப்பு மூட்டு வலியை கணிசமாகத் தணிக்கக் கூடும்.
உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உடல் எடையும்
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் பல உத்திகள், அது உருவாகும் வாய்ப்பையும் குறைக்க உதவக்கூடும்.
அவற்றில் ஒன்றுதான் தொடர்ச்சியான உடல் செயல்பாடு. ஓடுவது முழங்கால்களைச் சேதப்படுத்தும் என்ற பொதுவான நம்பிக்கை இருந்தபோதிலும், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஓட்டப் பயிற்சி / நடைப்பயிற்சியும் இருக்கலாம். ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதும் மூட்டுகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கக் கூடும்.
உணவைக் கொண்டு குறைத்தல்
உணவும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்ஸும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இதில் உணவுமுறையும் முக்கியமானது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் நிறைந்த, அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை வரம்புக்குள் கொண்டு வரும் ஆரோக்கியமான உணவு முறை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸிலிருந்து விடுபட்டு பாதுகாப்பையும் வழங்கக்கூடும்.
குடும்ப வரலாறு உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்பது புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களிலிருந்து வேறுபட்டது. இருப்பினும், உடல்நலம், நல்வாழ்வு, வாழ்க்கைத் தரத்தின் மீது அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுக்கான அபாயத்தைக் குறைப்பதற்கும், தங்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுவதற்குமான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
“ஒருவரின் பெற்றோருக்கோ, தாத்தா - பாட்டிக்கோ ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் இருந்ததால், தனக்கும் அது நிச்சயமாக வரும் என்று சிலர் நினைக்கிறார்கள்,”.
“ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் குடும்பங்களில் தொடர்ந்து காணப்படக் கூடியது என்பது உண்மைதான். ஆனால், ஒருவரால் இந்த நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க எதுவும் செய்ய முடியாது என்று அதற்குப் பொருள் அல்ல. இது பரம்பரை நோயல்ல. மரபணுக்கள் மட்டுமே உங்களுக்கு கீல்வாதம் வரும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. அன்றாட வாழ்க்கை மற்றும் உடல் காரணிகள் உங்கள் மரபணுக்களுடன் இணைந்து இந்த நிலையைத் தூண்டுகின்றன”
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் / கீல்வாதம் என்பது ஒரு தனிப்பட்ட பரம்பரை நோயாக நேரடியாகக் கடத்தப்படுவதில்லை. மாறாக, இதற்கு ஒரு வலுவான மரபணுக்கூறு உள்ளது, அதாவது குடும்பத்தில் இந்நோய் இருந்த வரலாறு உங்கள் ஆபத்தை அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்ட மூட்டைப் பொறுத்து, இரட்டையர் மற்றும் குடும்ப ஆய்வுகள், இந்நோய் ஏற்படும் அபாயத்தில் சுமார் 40% முதல் 70% வரை மரபணுக்களே காரணமாகின்றன என்பதைக் காட்டுகின்றன
மரபுவழிப் பண்புகள்
மூட்டுகளின் வடிவங்கள், எலும்புகளின் சீரமைப்புகள் அல்லது பலவீனமான குருத்தெலும்பு அமைப்பு போன்றவற்றை நீங்கள் மரபுவழியாகப் பெறக்கூடும். இவை, தேய்மானம் விரைவாக ஏற்படக் காரணமாக அமையலாம்.
அரிதான மரபணு மாற்றங்கள்: அரிதான, பரம்பரை மரபணுக் கோளாறுகள், குறைபாடுள்ள கொலாஜன் உற்பத்தியின் மூலம் கடுமையான, இளம் வயதிலேயே மூட்டுச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் , ஆனால் இவை மிகவும் அரிதானவை.
[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]
Causes and solutions of Osteoarthritis
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.