திட்டமும் நோக்கமும்...
இந்த ஆண்டு எல்-நினோ பாதிப்பால் பருவ மழை பற்றாக்குறை சூழ்நிலையில் உதவித் தொகை நீட்டிப்பு என்பது விவசாயிகளுக்கு ஆறுதலான செய்தி.
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தை (பிஎம் கிஸான்) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) நீட்டிப்பதுடன், சுமார் ரூ.3.16 லட்சம் கோடி நிதி ஒதுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போதாக்குறைக்கு இந்த ஆண்டு எல்-நினோ பாதிப்பால் பருவ மழை பற்றாக்குறை சூழ்நிலையில் உதவித் தொகை நீட்டிப்பு என்பது விவசாயிகளுக்கு ஆறுதலான செய்தி.
விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் இலக்கு அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆண்டுதோறும் விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வு, சீரற்ற பருவ மழை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, விளைச்சல் பாதிப்பு, சந்தையில் விலை ஏற்ற}இறக்கம் என எல்லாச் சூழ்நிலைகளும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2015-16-இல், விவசாயிகளின் ஆண்டு வருவாயை 2022-க்குள் இரட்டிப்பாக்குவதென இலக்கு நிர்ணயித்தது. அப்போதே குறுகிய காலமான அடுத்த 7 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். உற்பத்தியை அதிகரிப்பது, தீவிர பயிர் சாகுபடி, இடுபொருள்களை திறம்பட பயன்படுத்துவதன்மூலம் செலவைக் குறைப்பது மற்றும் பாரம்பரிய பயிர்களில் இருந்து மாறி பணப் பயிர்களை பயிரிடுதல்மூலம் வருவாயை இரட்டிப்பாக்கலாம் என அரசு சார்பில் அதற்கு விளக்கம் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
எனினும், அதற்கான அரசின் கொள்கைகள், புதிய தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவனம் சார்ந்த உதவிகள் கிடைப்பதில் இன்னமும் சிக்கல்கள் நீடிக்கின்றன. விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்புக்காக மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கடந்த 2019-இல் தொடங்கப்பட்ட பிஎம் கிஸôன் உதவித் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்ற முறையில் மூன்று தவணைகளாக ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியிலான இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது முதல் தவணையை சுமார் 3.16 கோடி விவசாயிகள் மட்டுமே பெற்றனர். இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 23 தவணைகள் மூலம் மொத்தம் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூனில் வழங்கப்பட்ட 23-ஆவது தவணையை 9.49 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர்.
நாட்டில் நிலம் உள்ள விவசாயிகள் மொத்தம் சுமார் 14.60 கோடி பேர். எனவே, இன்னமும் சுமார் 5 கோடி பேருக்கு இந்த உதவித் தொகை சென்றடையவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். திட்டப் பயனாளிகளில் நான்கில் ஒருவர் பெண் விவசாயி என்பது கூடுதல் சிறப்பாகும். அதாவது, பெண் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டில் ஓர் ஏக்கருக்கான சாகுபடி செலவு நபார்டு கணக்கீட்டின்படி ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை இருந்தது. இப்போது இடுபொருள்கள் விலை மற்றும் கூலி உயர்வால் சுமார் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் செலவாகிறது. சாகுபடி செலவு 3 மடங்கைத் தொடும் நிலையில் உதவித் தொகையை இரட்டிப்பாக்கி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2019-இல் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத் தொகையானது, 2024 தேர்தலின்போது உயர்த்தப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் உயர்த்தப்படவில்லை. இப்போது திட்ட நீட்டிப்பு அறிவிப்பிலும் உதவித் தொகை உயர்த்தப்படவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்பது விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் தொகை உயர்த்தப்படாதது சற்று ஏமாற்றம்தான்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியானது வீண் செலவு செய்யப்படுவதில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, 92 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளிகள் இந்த உதவித் தொகையை வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
உதவித் தொகையின்மூலம் தங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், முறைசாராக் கடன்களை சார்ந்திருப்பது குறைந்துள்ளதாகவும் 85 சதவீத விவசாயிகள் தெரிவித்துள்ளது, திட்டத்தின் நோக்கம் நிறைவேறி வருவதை உணர்த்துகிறது. அரசு அதைக் கவனத்தில் கொண்டாவது உதவித் தொகையை உயர்த்த வேண்டியது அவசியம்.
அது மட்டுமல்லாது, திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும், விதிகளின்படி 2019-க்கு பிறகு விவசாய நில உடைமையாளர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது. அந்த விதியில் திருத்தம் மற்றும் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை நீக்கி எளிதாக்கினால் விடுபட்ட 5 கோடி விவசாயிகளும் பயன்பெற முடியும். அப்போதுதான் திட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.