அச்சம்கொள்ளத் தேவையில்லை!
மக்கள் தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்கி சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளதால், இதேநிலை தொடர்ந்தால் அதுவே பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பொன்னி, சோனா மசூரி உள்ளிட்ட சன்ன ரக அரிசி, அவற்றின் தரத்துக்கு ஏற்ப கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 30 வரையிலும், மூட்டைக்கு (26 கிலோ) ரூ. 300 முதல் ரூ. 600 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்பதுடன் தட்டுப்பாடும் ஏற்படலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
எல்-நினோ பாதிப்பு, தென் மேற்குப் பருவ மழை பற்றாக்குறை, காவிரி படுகையில் குறுவை நெல் சாகுபடி பரப்பளவு குறைவு போன்றவை இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என்றாலும், நாட்டின் மொத்த அரிசி கையிருப்பைக் கணக்கிடும்போது அச்சம் தேவை இல்லை என்றே கருதலாம். எனினும், மக்கள் தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்கி சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளதால், இதேநிலை தொடர்ந்தால் அதுவே பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 70 முதல் 75 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டாலும் தேவை சுமார் 90 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களில் சாதாரண ரகத்தின் பங்குதான் அதிகம். அதிக மகசூல், நோய் எதிர்ப்புத் திறன், வறட்சியை தாங்குதல், இடுபொருள் செலவு குறைவு போன்ற காரணங்களால் விவசாயிகள் சாதாரண ரக நெல்லையே அதிகம் பயிரிடுகின்றனர்.
Advertisement
Advertisement
மக்கள் பயன்படுத்தும் அரிசியின் தேவையில் சாதாரண ரக அரிசியின் பங்கு சுமார் 35% மட்டுமே. அதன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். எஞ்சிய 65% சன்ன ரக அரிசி ஆகும். அதன் வாசனை, சுவை மற்றும் இழை நயத்துக்காக சன்ன ரகத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே விவசாயிகள் சாதாரண நெல் ரக சாகுபடியிலிருந்து படிப்படியாக சன்ன ரக நெல் சாகுபடிக்கு மாறத் தொடங்கிவிட்டாலும், இன்னும் தமிழ்நாட்டின் தேவையை முழுமையாக நிறைவு செய்யும் அளவுக்கு சன்ன ரக நெல் உற்பத்தி எட்டப்படவில்லை. எனவே, சன்ன ரக நெல் அதிகம் சாகுபடி செய்யப்படும் அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இங்குள்ள ஆலைகள் அரிசியை உற்பத்தி செய்து சந்தையின் தேவையை நிறைவு செய்து வருகின்றன. நிகழாண்டு அந்த மாநிலங்களில் பருவ மழை பற்றாக்குறையால் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பே தற்போதைய அரிசி விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாகும்.
எல்-நினோ பாதிப்பால் நிகழாண்டு தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழை காலத்தில் நெல் சாகுபடி பரப்பளவு 28% குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டில் 17.50 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு அது 12.52 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டதால் காவிரிப் படுகையில் குறுவை சாகுபடி பரப்பளவு சுமார் 2 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது. தேசிய அளவில் பருவ மழை பற்றாக்குறையால் கடந்த ஆண்டின் உற்பத்தியைவிட 6.5% அதாவது சுமார் ஒரு கோடி டன் குறைந்து 14.4 கோடி டன் நெல் உற்பத்தி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
நாட்டில் தென் மேற்குப் பருவ மழை 13% குறைந்திருந்தாலும், வடகிழக்குப் பருவ மழை தென் மாநிலங்களில் அதிகம் பெய்ய வாய்ப்புண்டு என்பது வானிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். எனவே, அடுத்த இரண்டொரு நாள்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் ஆண்டின் மொத்த உற்பத்தியில் குறைவு இருக்காது என்று வேளாண்மைத் துறையினர் உறுதி கூறுகிறார்கள்.
எனினும், தென் மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரிக்கும் மேலாக பருவ மழை பெய்து வேளாண் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மொத்தத்தில் நெல் உற்பத்தி குறையும்; அதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்து அதைவைத்து பதுக்கல், கூடுதல் விலை ஆகியவற்றால் கொள்ளை லாபம் பார்க்கும் சில வர்த்தகர்களின் பங்கும் இந்த விலை உயர்வில் இருக்கக் கூடும்.
இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்குகளில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நிலவரப்படி அரசின் இலக்கான 1.03 கோடி டன் என்பதை விஞ்சி 5.96 கோடி டன் அரிசி மற்றும் நெல் இருப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கொள்முதல் மையங்களில் 9 லட்சம் டன் நெல்லும், இங்குள்ள மத்திய அரசின் கிடங்குகளில் சுமார் 40 லட்சம் டன் நெல்லும் கையிருப்பில் உள்ளது. இது மாநிலத்தின் 3 மாதங்களுக்கான தேவையைவிட அதிகம் என்பதால், உடனடியாக அரிசிப் பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பில்லை. ஜனவரியில் சந்தைக்கு புதிய நெல் வரத்து தொடங்கிவிடும்.
அதேவேளையில், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சன்ன ரக அரிசியின் தேவையை நிறைவு செய்ய அத்தகைய நெல் ரகங்களை அதிகமாக பயிரிடும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதோடு மட்டுமல்லாது மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப புதிய சன்ன நெல் ரகங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அவற்றைப் பயிரிடுவோருக்கு ஊக்கத்தொகை அளித்து உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடி நடவடிக்கையாக சந்தையில் அரிசி விநியோகத்தை சீர் செய்வது, பதுக்கலை தடுப்பது, அரிசியின் இருப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றை அரசு செய்தால் மட்டுமே மக்கள் மத்தியில் பரவி வரும் தேவையற்ற பீதியை தடுக்க முடியும்.
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்; வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
திருக்குறள் (எண் 662 ) அதிகாரம்: வினைத்திட்பம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.