FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேளாண் இடரும், தீர்வும்...

வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம்தான் இந்தியாவின் விவசாயிகளைக் கடனிலிருந்தும், அதன் காரணமாக ஏற்படும் தற்கொலை முயற்சிகளிலிருந்தும் காப்பாற்ற முடியும்.

17 செப்டம்பர் 2026, 4:35 am IST
வேளாண் இடரும், தீர்வும்... - பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவின் வேளாண் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வேளாண் துறையின் வளர்ச்சி, ஆக்கபூர்வ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கடந்த கால் நூற்றாண்டாகத்தான் வேகமெடுத்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

2024-2025 ஆண்டுகளில், வேளாண் ஆராய்ச்சிகளும், தொழில்நுட்பமும் வேளாண் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், மேம்படுத்தப்பட்ட விதைகள், இயந்திரங்களின் பயன்பாடு, பருவ நிலைகளை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பம், விரிவுபடுத்தப்பட்ட சேவைகள், இயற்கை விவசாயத்தின் மேலாண்மை உள்ளிட்டவை என்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்கிறது.

தங்களது கணிப்பும், ஆய்வுகளும் துல்லியமானவை அல்ல என்றாலும், ஓரளவுக்கு வளர்ச்சி குறித்த போக்கை அடையாளம் காட்டுபவை என்று ஐசிஏஆர் என்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தெளிவுபடுத்தாமல் இல்லை. அதே நேரத்தில் ஒரு முக்கியமான தகவலை அந்தக் கணிப்புகள் நமக்குத் தெரிவித்திருக்கின்றன. வேளாண் ஆராய்ச்சிகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதையும், வேளாண் வளர்ச்சிக்கான ஆதாரமாக அவை விளங்கும் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

Advertisement

Advertisement

இந்தியாவின் வேளாண் துறை பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறது. மானியங்களும், இடுபொருள்களுக்கான உதவியும் அந்த சவால்களை எதிர்கொள்வதற்குப் போதுமான விடை அல்ல. குறைந்துவரும் 'லான்ட் ஹோல்டிங்ஸ்' எனப்படும் நில இருப்பு கவலையளிக்கிறது. ஒவ்வொரு தலைமுறை மாறும்போதும், பாகப்பிரிவினை ஏற்படுவதால்தான், அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்படுகின்றன அல்லது தரிசாகப் போடப்படுகின்றன.

தொடர்ந்து ரசாயன உரங்கள், குறிப்பாக யூரியா உபயோகம் அதிகரிப்பதால் விளைநில மண் சத்திழந்து மலடு தட்டுகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவது, அதிகரிக்கும் பூச்சிகள் தாக்குதல், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ளிட்டவையும் சேர்ந்து கொள்வதால் வேளாண் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

பாசனப் பரப்பு அதிகரிப்பதால் பலனில்லை என்பது மட்டுமல்ல, அது சாத்தியமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. மேலே குறிப்பிட்ட காரணங்களால், குறைந்த நிலப்பரப்பு காரணமாக இந்திய விவசாயிகள் மகசூலை அதிகரிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், இருக்கும் இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு, அதிக மதிப்புள்ள வேளாண் உற்பத்திக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும், பூச்சிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்படாத விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது அவசியம். அந்த ஆராய்ச்சிகளுக்குப் போதிய முதலீடுகள் தேவை. அது மட்டுமல்ல, இந்திய விவசாயிகளை அதிக லாபம் தரும் தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தும் பயிற்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

ஐசிஏஆரின் சாதனைகள் குறித்த புள்ளிவிவரங்கள், அந்த அமைப்பு ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களை உணர்த்துகின்றன. 2024-2025 ஆண்டுகளில் பயிர்களின் உற்பத்தி 19 மில்லியன் டன்; தோட்டப் பயிர்களின் உற்பத்தி 7 மில்லியன் டன்; மீன் வளர்ப்பு உற்பத்தி 1.4 மில்லியன் டன் அதிகரித்திருக்கிறது. அதன்மூலம் சுமார் ரூ.40,000 கோடி கூடுதலாக வேளாண் துறை ஈட்டியிருக்கிறது.

386 மேம்படுத்தப்பட்ட பயிர் விதைகளை, ஐசிஏஆர் 2025-இல் உருவாக்கி இருக்கிறது. அவற்றில் 94% பயிர் விதைகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலானவை. இது போன்ற உற்பத்தியை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் வேளாண் துறை வளர்ச்சியை வடிவமைக்கத் தொடங்கி இருக்கின்றன.

'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் எக்கனாமிக்ஸ் அண்ட் பாலிசி ரிசர்ச்' என்கிற அமைப்பின் கணிப்பின்படி, வேளாண் ஆராய்ச்சிக்கு செலவாகும் ஒவ்வொரு ரூபாயும், ரூ.13.85 என்கிற அளவில் பலனளிக்கிறது. வேறு எந்தத் துறையிலும் ஆராய்ச்சிகள் இந்த அளவு லாபமளிப்பதில்லை. அப்படி இருந்தும்கூட, நாம் வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

2004-2005 இந்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ரூ. 4,836 கோடி ஒதுக்கீடு, 2026-27-இல் ரூ. 9,266 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால், ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடு ஜிடிபியில் 0.6% மட்டுமே. நமது வேளாண் துறை ஒதுக்கீட்டில் 73% மானியங்களுக்காகவும், மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் சென்று விடுகிறது.

உணவு, உரம், எரிசக்தி ஆகியவற்றுக்கான 2026-27-க்கான மானியம் ரூ. 4.1 டிரில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் ஆராய்ச்சி, கல்விக்கான ஒதுக்கீட்டைவிட இது 44 மடங்கு அதிகம்.

மானியங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை தீர்வாகமாட்டா. அதனால், வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம்தான் இந்தியாவின் விவசாயிகளைக் கடனிலிருந்தும், அதன் காரணமாக ஏற்படும் தற்கொலை முயற்சிகளிலிருந்தும் காப்பாற்ற முடியும்.

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம்என்னும் நல்லாள் நகும்.

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நில மகள் தன்னுள் சிரிப்பாள்.

திருக்குறள் (எண் 1040) அதிகாரம்: உழவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments