11.10.1976: கல்லூரி ஆசிரியர் பதவிக்கு தகுதிகள்: சென்னை பல்கலைக்கழக விதிகள் திருத்தம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
திருச்சி. அக். 10 - சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் டியூட்டர் - டெமான்ஸ்டிரேட்டர், துணைப் பேராசிரியர் - விரிவுரையாளர், பிரின்சிபால் முதலிய பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய திருத்தப்பட்ட விதிமுறைகளை அடுத்த 1977-78 கல்வியாண்டிலிருந்து அமலுக்குக் கொண்டு வர சென்னை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
திருத்தப்பட்ட விதிகள் அங்கீகாரத்துக்கென பல்கலைக்கழக அகாடமிக் கவுன்சில் முன்பாக வைக்கப்படும் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி பி. ஏ. ஹானர்ஸ், எம்.ஏ. அல்லது பி. எஸ்.ஸி. ஹானர்ஸ் - எம்.எஸ்.ஸி அல்லது பி.காம் ஹானர்ஸ் - எம்.காம் பரீட்சைகளில் முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் தேறியவர்களாகவும், குறிப்பிட்ட பாடத்தில் மொத்தத்தில் 50 சதவிகிதத்துக்குக் குறையாமல் அல்லது கிரேடிங் முறைப்படி 'பி' கிரேட் வாங்கியவர்களாகவும் உள்ளவர்கள் மட்டுமே டியூட்டர் - டெமான்ஸ்டிரேட்டர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட பாடத்தில் பட்ட மேற்படிப்பு பரீட்சையில் முதல் அல்லது இரண்டாவது வகுப்பில் தேறி மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மார்க் அல்லது கிரேடிங் முறைப்படி 'பி' கிரேட் வாங்கியவர்களை அல்லது எம். பில் பரீட்சையில் தேறியவர்களை மட்டுமே 1977 ஜனவரி 1ந் தேதிக்குப் பிறகு கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாக - விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் திருத்தப்பட்ட விதிமுறைகள் கூறுகின்றன(எனினும் தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு வேலை நிரந்தரம் பதவி உயர்வு விஷயத்தில் திருத்தத்துக்கு முந்தைய விதிகள் பொருந்தும்.) ...
Advertisement
Advertisement
ரூ. 75 கோடி பெறும் திருப்பதி கோவில் தங்கம் மத்திய ரிசர்வில் சேரும்?
புதுடில்லி, அக். 10 - திருப்பதி ஆலயத்தின் ரூ. 75 கோடி பெறுமான தங்கம், இந்திய அரசாங்கத்தின் தங்க இருப்பில் சேர்ந்து விடக்கூடும்.
தனது வசம் உள்ள தங்கத்தை திருப்பதி தேவஸ்தானம் அரசாங்கத்துக்கு "விற்று" விட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆலோசனை கூறியிருக்கிறது என்று தெரிகிறது. தேவஸ்தான அதிகாரிகளின் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு, அந்தத் தங்கத்திற்குப் பதிலாகப் பணமாகக் கொடுப்பதா அல்லது வேறு வகையில் ஏதாகிலும் கொடுப்பதா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும்.
இவ்வளவு பெரிய அளவில் உள்ள தங்கம் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடாது என்று அரசாங்கம் கருதுகிறது.
இந்த ஆலயம் மிகவும் புராதனமானது, கிறிஸ்து பிறந்த சகாப்தத்தைச் சார்ந்தது என்று அதன் வரலாறு கூறுகிறது. பண்டைய தமிழ் இலக்கியமான "மணிமேகலை" அதைக் குறிப்பிடுகிறது. ஆனாலும் கல்வெட்டுகளை எடுத்துக்கொண்டால் 9-ம் நூற்றாண்டுப் பல்லவ காலத்துக் கல்வெட்டுக்களாக இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுக்கள் திருமலையில் எடுக்கப்படவில்லை, திருச்சானூரில் எடுக்கப்பட்டவை.
Qualifications for the post of college teacher: Amendment to University of Madras regulations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.