FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்கூட்டியே தேர்தல்: தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைக்க மாநில அமைச்சரவை பரிந்துரை 

முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

Updated On : 6 செப்டம்பர் 2018, 4:29 pm IST
பகிர்:

ஹைதராபாத்: முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட தெலங்கானா, முதல் முறையாக கடந்த 2014-இல் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வரானார். அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவைடைகிறது.

எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு சந்திரசேகர் ராவ் விரும்பவில்லை. குறிப்பாக விரைவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து தெலங்கானா சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தவே அவர் விரும்புகிறார். அதற்காக, முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக, சட்டப் பேரவையைக் கலைப்பதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

இதனிடையே, அண்மையில் பல்வேறு நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இதனால், அவர் பேரவையைக் கலைக்க முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசிய சந்திரசேகர் ராவ், கட்சியின் நலன் கருதியும், மாநில மக்களின் நலன் கருதியும் பேரவையைக் கலைப்பதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர்களும், அமைச்சர்களும் தனக்கு வழங்கியிருப்பதாகக் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக தெலங்கானா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, பேரவையைக் கலைப்பது குறித்து முடிவெடுக்க மாநில அமைச்சரவை வியாழக்கிழமை கூடுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 5 நாள்களில் இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக இதுகுறித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், தெலங்கானா சட்டப் பேரவை கலைக்கப்படுவது உறுதி; இதற்காக, முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்யும் அல்லது முடிவு செய்வது குறித்து விவாதிப்பதற்கு பேரவைக் கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.

இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று மாலை முதல்வர் சந்திரசேகர் ராவ் மாநில ஆளுநர் நரசிம்மனைச் சந்திக்க உள்ளதாகவும், பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments