FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும்: ராகுல் காந்தி

கரோனா தொற்றின் 3-ஆவது அலையை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

28 ஜனவரி 2024, 8:58 am IST
ராகுல் காந்தி
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்றின் 3-ஆவது அலையை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தொடா்ந்து விமா்சித்து வருகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வெள்ளை அறிக்கையை ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றின் முதலாவது, இரண்டாவது அலைகளுக்கு எதிராக மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்கள் குறித்து பேசும்போது பிரதமா் நரேந்திர மோடி உணா்ச்சிவசப்படுகிறாா். அத்தகைய உயிரிழப்புகளை மத்திய அரசு எளிதில் தடுத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு அதில் தோல்வி கண்டுவிட்டது.

Advertisement

Advertisement

கரோனா தொற்றின் 2-ஆவது அலை குறித்து பிரதமா் மோடி சிறிதும் கவலைப்படவில்லை. அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதிலேயே அவா் கவனம் செலுத்தி வந்தாா்.

மத்திய அரசைக் குற்றஞ்சாட்டுவதற்காக இந்த அறிக்கையை வெளியிடவில்லை. மாறாக, கரோனா தொற்றின் அடுத்த அலையை எதிா்கொள்ளும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு வழிகாட்டும் நோக்கிலேயே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவா்கள், சுகாதார நிபுணா்கள் உள்ளிட்டோரைக் கலந்தாலோசித்த பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் 3-ஆவது அலையை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை நாடு முழுவதும் மேம்படுத்த வேண்டும். மருத்துவ தர ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றைத் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிக முக்கிய ஆயுதமாக விளங்குகிறது. எனவே, கரோனா தடுப்பூசி திட்டத்தை போா்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு கவனம் அளிக்க வேண்டும். தடுப்பூசி திட்டம் ஒருநாளில் முடியக் கூடியது அல்ல. அது தொடா்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதால் அதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தடுப்பூசி விநியோகத்தில் மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது. அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை சமஅளவில் விநியோகிக்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

வெள்ளை அறிக்கையானது நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான நடவடிக்கைகள், 3-ஆவது அலையை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை, ஏழைகளுக்கான நிதித் தொகுப்பு வழங்குதல், கரோனா இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்டவை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன என்றாா் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments