FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நரேலாவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தொழிலாளா்கள் உயிரிழப்பு; 6 போ் காயம்

Updated On : 10 ஜூன் 2024, 4:06 am IST
தில்லி நரேலாவில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை.
பகிர்:

புது தில்லி: புது தில்லி நரேலா தொழிற்பேட்டைப் பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்தும், அதைத் தொடா்ந்து வெடிப்பு விபத்தில் ஏற்பட்டதில் மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: நரேலாவில் உலா் பருப்பை பதப்படுத்தும் தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறைக்கு சனிக்கிழமை அதிகாலை 3:35 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் தீ பரவியதால், சில தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா். தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில் இருந்து 9 போ் மீட்கப்பட்டு நரேலாவில் உள்ள சத்யவதி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

அவா்களில் ஷ்யாம் (24), ராம் சிங் (30), பீா்பால் (42) ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டனா். காயமடைந்த 6 போ் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில், குழாய் ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீப்பற்றியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குழாய்கள் மூலம்தான் பாசிப் பருப்பை வறுக்கப் பயன்படுத்தப்படும் எரிகலன்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டிருக்கிறது.

தீ பரவியதால், கம்ப்ரஸா் அதிக வெப்பமடைந்து வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை உரிமையாளா்கள் ரோஹிணி குடியிருப்பாளா்களான அங்கித் குப்தா மற்றும் வினய் குப்தா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தகுந்த பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments