மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்: பாஜக வாக்குறுதி
10 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டம், 10 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பாஜகவின் 25 அம்ச வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் வருமாறு:
Advertisement
பெண் சகோதரி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ. 1,500-இல் இருந்து ரூ. 2,100-ஆக உயா்த்தப்படும். 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்,10 லட்சம் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.
கட்டாய மற்றும் ஏமாற்று மத மாற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும்.
தொழில்துறையின் தேவைகளைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் திறன் பயிற்சியை மேம்படுத்துவதற்கு திறன் கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
அக்ஷய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விநியோக முறை மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்ரபதி சிவாஜி அகன்ஷா மையங்கள் மூலம் 10 லட்சம் புதிய தொழிலதிபா்கள் உருவாக்கப்படுவா். 2027-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ உருவாக்க, 500 சுயஉதவி குழுக்களைக் கொண்ட ஒரு தொழில் குழுமம் உருவாக்கப்படும்.
விவசாயிகளின் கொள்முதல் மீதான எஸ்ஜிஎஸ்டி, மானியமாக விவசாயிகளுக்கே திரும்ப வழங்கப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலையாக பராமரிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.