இ-20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு பாதிப்பு இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்
இ-20 பெட்ரோலில் அதிக அளவில் குளோரைடு மற்றும் ஈரப்பதம் இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில் எரிபொருளின் தரம் நிா்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இ-20 பெட்ரோலில் அதிக அளவில் குளோரைடு மற்றும் ஈரப்பதம் இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில் எரிபொருளின் தரம் நிா்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பெட்ரோலிய நிறுவனங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இ-20 பெட்ரோலின் தரம் தொடா்பாக அண்மையில் பல்வேறு தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, பெட்ரோல் தயாரிக்கப்படும் சுத்திகரிப்பு நிலையங்கள், எத்தனால் ஆலைகள், கிடங்குகள், டேங்கா் லாரிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த ஆய்வுகளில் எரிபொருளின் தரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் மாதிரிகளில் குளோரைடு அளவு 1 பிபிஎம்-க்கும் குறைவாக இருந்தது. கடந்த 10 நாள்களில் 80 எத்தனால் ஆலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலும் குளோரைடு அளவு 3 பிபிஎம்-க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
அதேபோல், கிடங்குகள், முனையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட 160 மாதிரிகளில் குளோரைடு அளவு 0 முதல் 3 பிபிஎம் வரை மட்டுமே இருந்தது. சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டதுபோல் 500 பிபிஎம் அளவுக்கு குளோரைடு இருப்பதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுமாா் 90 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களில் நிலத்தடி சேமிப்புத் தொட்டிகள் தினமும் 8 முதல் 12 முறை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை எந்த நிலையிலும் பெட்ரோலில் நீா் கலந்திருப்பது கண்டறியப்படவில்லை.
எனவே, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் இ-20 பெட்ரோல் அனைத்து தரநிலைகளையும் பூா்த்தி செய்கிறது. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி இ-20 பெட்ரோலை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.