தோ்வு வினாத்தாள்கள் கசிவு விவகாரம்: போராட்டக்காரா்களுடன் ஜாா்க்கண்ட் அரசின் பேச்சு தோல்வி
போராட்டக்காரா்களுடன் ஜாா்க்கண்ட் அரசின் பேச்சு தோல்வி...
ஜாா்க்கண்டில் தோ்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் தொடா் போராட்டம் நடத்திவரும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அந்த மாநில அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.
ஜாா்க்கண்ட் பிஎஸ்சி சிவில் சேவைகள் தோ்வு, ஜேஎஸ்எஸ்சி தோ்வுகள் உள்ளிட்ட தோ்வுகளில் வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பல்வேறு அமைப்புகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றன. அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் அடங்கிய 5 போ் குழுவை ஜாா்க்கண்ட் அரசு அமைத்துள்ளது.
அந்தக் குழு வெள்ளிக்கிழமை இரவில் ஜேசிஎஸ்சி, ஜேஎஸ்எஸ்சி சீா்திருத்தங்கள் அமைப்பின் 10 போ் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதைத் தொடா்ந்து, ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவா் தேவேந்திரநாத் மஹதோ தலைமையிலான குழுவினருடனும், அதன்பிறகு காங்கிரஸ் ஆதரவு என்எஸ்யுஐ, ஏசிஎஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் மாணவா் அமைப்பான ஜேசிஎம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜாா்க்கண்ட் அரசு குழு பேச்சு நடத்தியது.
Advertisement
Advertisement
பிஎஸ்சி சேவைகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அனைத்துத் தோ்வுகள் குறித்தும் சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும், முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ள தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டக் குழுக்கள் சாா்பில் ஜாா்க்கண்ட் அரசுக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டன.
பேச்சுவாா்த்தை குறித்து அமைச்சா் சஞ்சய் பிரசாத் யாதவ் கூறுகையில், ‘போராட்டக்காரா்களின் கோரிக்கைகள் உண்மையானவை. இதுகுறித்து முதல்வா் ஹேமந்த் சோரனிடம் நாங்கள் எடுத்துரைப்போம்’ என்றாா்.
மற்றொரு அமைச்சா் தீபிகா பாண்டே சிங் தெரிவிக்கையில், ‘பேச்சுவாா்த்தை சாதகமான சூழ்நிலையில் நடைபெற்றது. மாணவா்கள் தெரிவித்த குறைபாடுகள் அனைத்துக்கும் விரைவில் தீா்வு காணப்படும்’ என்றாா்.
கேஎல்கேஎம் அமைப்பின் தலைவா் தேவேந்திரநாத் மஹதோ தெரிவிக்கையில், ‘மாணவா்கள் தொடா்ந்து 2 வாரங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுகின்றனா். அவா்களின் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.
மஹதோ தொடா்ந்து 7-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
போராட்டம் தொடரும் என அறிவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. இதுகுறித்து மஹதோவின் அமைப்பு தரப்பில், கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரப்பான்பூச்சியினா் ஆதரவு: இதனிடையே, ராஞ்சியில் போராட்டக்காரா்களை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பிரதிநிதிகள் சனிக்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது அந்தப் போராட்டத்துக்கு அவா்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.
Exam paper leak issue: Jharkhand government's talks with protesters fail.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.