சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது!
நாடு முழுவதும் 253 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
சுதத்திர நாளையொட்டி, மிகப்பெரிய தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 253 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஐஎஸ்ஐ அமைப்பின் நிதியுதவியுடன் இயங்கும் 'ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்' என்ற பயங்கரவாத அமைப்பு, நாடு முழுவதும் சுதந்திர நாளன்று கையெறி குண்டு, ஐஇடி குண்டு, பெட்ரோல் குண்டு உள்ளிட்டவை பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது.
இதற்காக காவல்துறை பாதுகாப்பு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கவும், உளவு பார்ப்பதற்காகவும் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தும் உள்ளூர் நபர்களுக்கு பணம் வழங்கி திட்டமிட்டு வந்தது.
Advertisement
Advertisement
இதனை அறிந்த இந்திய உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் மூலம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரே நாளில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"சுதந்திர நாளுக்கு முன்னதாக ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் இயங்கும் 'ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்' என்ற பயங்கரவாத அமைப்பை மோடி அரசு அழித்தது. 200-க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்களைக் கைது செய்ததன் மூலம், நாசவேலைத் தாக்குதல்களுக்கான அக்குழுவின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.
14 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகள் இக்கட்டமைப்பைச் சிதைத்தன.
ஐஎஸ்ஐ அமைப்பின் நிதியுதவி பெற்ற இக்குழுவிடமிருந்து ஐஇடி-கள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், உளவு பார்ப்பதற்கான சிசிடிவி கேமிராக்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி.யில் 62, ஹரியாணாவில் 52, தில்லியில் 51, பஞ்சாபில் 44, ராஜஸ்தானில் 15, மகாராஷ்டிரத்தில் 8, உத்தரகண்டில் 5, கர்நாடகம், பிகார் மற்றும் குஜராத்தில் தலா 3, தெலங்கானா, ஹிமாசல், ஜம்மு - காஷ்மீர் மற்றும் கேரளத்தில் தலா 2 என 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக உபா, பிஎன்எஸ் ஆயுதத் தடுப்புச் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் 80-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Major plot foiled on Independence Day! 253 ISI-linked terrorists arrested!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.