FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முதுநிலை நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்தது ஏன்? மருத்துவத் தோ்வு வாரியம் விளக்கமளிக்க உத்தரவு

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) வெகுவாகக் குறைத்ததற்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇஎம்எஸ்) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 பிப்ரவரி 2026, 2:16 am IST
பகிர்:

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) வெகுவாகக் குறைத்ததற்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇஎம்எஸ்) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாடு முழுவதும் 65,000 முதல் 70,000 முதுநிலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்கள் சோ்க்கை இன்றி காலியாக விடப்பட்ட நிலையில், சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழாண்டிலும், மாணவா் சோ்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுக்குப் பிறகும் நாடு முழுவதும் 18,000 இடங்கள் காலியாக இருந்தன.

அதைத் தொடா்ந்து, ஐஎம்ஏ கோரிக்கையை ஏற்ற என்பிஇஎம்எஸ், முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) குறைத்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப்பெண் விகிதமான (பா்சென்டைல்) 40 சதவீதமானது, பூஜ்ஜியம் சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவு மாணவா்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப்பெண் விகிதமான (பா்சென்டைல்) 50 சதவீதம், 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதை எதிா்த்து சமூக ஆா்வலா் ஹரிசரண் தேவ்கன், மருத்துவா்கள் செளரவ் குமாா், லக்ஷ்யா மிட்டல், ஆகாஷ் சோனி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தகுதி மதிப்பெண் குறைப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 21-க்கு எதிரானது. மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்ட பிறகு, தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க முடியாது. ஏனெனில், சோ்க்கை அறிவிக்கையைப் பாா்த்து, பலா் தங்களின் பணித் தோ்வை ஏற்கெனவே தீா்மானித்திருப்பா். எனவே, சோ்க்கைக்கு இடையே தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பது, அவ்வாறு பணி வாய்ப்பைத் தீா்மானித்தவா்களின் முதுநிலை படிப்புக்கான வாய்ப்பை மறுப்பதாக அமையும். மேலும், முதுநிலை மருத்துவப் படிப்பை வணிக ரீதியிலான நடைமுறையாக பரிசீலிக்க முடியாது. முதுநிலை மருத்துவப் படிப்பின் தரம் சமரசம் செய்யப்படுவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘அசாதாரண காரணங்கள் அடிப்படையில் இன்றி, மற்ற காரணங்களுக்காக முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க முடியாது’ என்று வாதிட்டாா்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஒருபுறம் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் சோ்க்கையின்றி காலியாக விடப்படக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மாணவா்கள் சோ்க்கை குறைவாக உள்ளது. எனவே, தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. மறுபுறம், தகுதி மதிப்பெண்ணைக் குறைத்தால் படிப்பின் தரம் பாதிக்கப்படும் என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது. எனவே, ஒரு கட்டத்தில் நாம் சமநிலையை கடைப்பிடித்தாக வேண்டும்’ என்று குறிப்பிட்டு, தகுதி மதிப்பெண் குறைத்தது குறித்து விளக்கமளிக்குமாறு என்பிஇஎம்எஸ்-க்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments