நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது பற்றி...
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
இதன்காரணமாக நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் காலைமுதல் தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இருப்பினும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலைமுதல் அரசுப் பேருந்துகள் பெரிய அளவிலான பாதிப்பின்றி சீராக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், காலை 10 மணிக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
Trade unions across the country to go on strike today! Will it affect Tamil Nadu?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.