ஒரே நாளில் ரூ. 96.98 கோடி! திருப்பதியில் நன்கொடை வழங்க பக்தர்கள் போட்டி! ஏன் தெரியுமா?
திருமலை திருப்பதி கோயிலில் சலுகைகள் குறைப்பும் நன்கொடைகள் அதிகரிப்பும் குறித்து...
திருமலை திருப்பதி கோயிலில் சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ரூ. 96.98 நன்கொடை அளித்துள்ளனர்.
திருமலை திருப்பதி கோயிலில் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்பட்டு, மாற்றம் செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
முன்னதாக, திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளிக்கும் பக்தர்கள், ஆண்டுக்கு 3 முறை குடும்பத்தில் 5 பேருடன் 20 ஆண்டுகளுக்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், ரூ. 10 லட்சம் நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, தற்போது ரூ. 10 லட்சம் நன்கொடை அளிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை 22,000-ஆக உள்ளது.
Advertisement
Advertisement
நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சலுகைகள் குறைக்கப்பட்டு மாற்றம் செய்ய திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதன்படி, ரூ. 10 லட்சம் நன்கொடையாளர்கள், இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குடும்பத்தில் 5 பேருடன் தரிசனம் செய்ய முடியும். இதுபோன்ற வெவ்வேறு சலுகைக் குறைப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய நடைமுறை புதிதாக நன்கொடை அளிப்பவர்களுக்கு மட்டுமே என்றும், புதிய நடைமுறை வியாழக்கிழமை (ஜூலை 16) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்னர் பலரும் பழைய சலுகைகளுக்காக வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் வரையில் கோடிக்கணக்கில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு அறக்கட்டளைகளில் நன்கொடை அளித்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதன்கிழமை (ஜூலை 15) ஒரே நாளில் மொத்தம் 2,460 பேர் ரூ.96.98 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
நன்கொடையாளர்களில் இருவர் தலா ரூ. 1 கோடிக்கும் மேலாகவும், 1,246 பேர் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலும், 1,212 பேர் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் நன்கொடை அளித்துள்ளனர்.
Tirumala Tirupati Devasthanams net record Rs 96.9 crore donation in a day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.