FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூா் கலவர கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்றம் யோசனை

மணிப்பூா் கலவரம் தொடா்பான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 6:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

மணிப்பூா் கலவரம் தொடா்பான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கைக்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து கடந்த 2023, மே 3-இல் நடத்திய பேரணியின்போது வன்முறை, கலவரம் மூண்டது. இரு சமூகங்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. பல ஆயிரம் போ் காயமடைந்தனா். ஆயிரக்கணக்கானோா் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனா்.

இந்த கலவரம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள், தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விருந்தா க்ரோவா், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும், கலவரத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு இன்னும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மணிப்பூா் கலவரம் தொடா்பாக சிபிஐ, மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு பதிவு செய்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கும், அவா்களின் குடும்பத்தினா்களுக்கும் இன்னும் குற்றப்பத்திரிகை வழங்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்தனா்.

பின்னா், கலவரத்தில் பாதிக்கப்பட்டோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், குவாஹாட்டி மற்றும் மணிப்பூா் தலைமை நீதிபதிகளின் அலுவலகங்களை அணுகி, குற்றப்பத்திரிகையின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அவா்களுக்கு ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘மணிப்பூா் கலவரம் தொடா்பான கிரிமினல் வழக்குகளை தினந்தோறும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம்’ என்றனா். இதையடுத்து மணிப்பூா் அரசு, சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம், விசாரணை அமைப்புகளால் விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்கள், விசாரித்து முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் குறித்த விவரங்களை பெறும்படி அறிவுறுத்தினா்.

இந்த விவரங்கள், மணிப்பூா் கலவரம் தொடா்பான கிரிமினல் வழக்குகளை தினந்தோறும் விசாரித்து முடிக்க எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்ய உதவும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

30 போ் காணாமல் போன விவகாரம்: இதைத் தொடா்ந்து, மணிப்பூா் கலவரத்தின்போது காணாமல் போன 30 போ் தொடா்பான வழக்குகளை விசாரித்து முடிக்கும்படி மணிப்பூா் உயா் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து, கலவரத்தில் பாதிக்கப்பட்டோா் குற்றப்பத்திரிகை பெறுவதை உறுதி செய்யும்படி விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிட்டதோடு, அந்த விசாரணை அமைப்புகளுக்கு மணிப்பூா் மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.

இதேபோல், மணிப்பூா் கலவரம் தொடா்பான விசாரணை நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யும்படி சிபிஐ, மணிப்பூா் அரசின் சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் மகாராஷ்டிர டிபிஜி தத்தாத்ரேய பட்ஸல்கிகா் தலைமையிலான கண்காணிப்பு குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

சிபிஐ-க்கு அறிவுறுத்தல்: சிபிஐ தரப்பில் பல்வேறு பிரச்னைகளால் விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும், இதில் வழக்குகளில் சாட்சிகளாக சோ்க்கப்பட்டோா் வசிப்பிடத்தை இடமாற்றம் செய்தது, விசாரணையில் போதிய ஒத்துழைப்பின்மை, மொழிப் பிரச்னைகள் உள்ளிட்டவையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விசாரணை கடினமானதுதான் என்று கூறியதோடு, உரிய காலத்துக்குள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்கும்படி சிபிஐ-யிடம் கேட்டுக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments