தில்லியில் இன்று ‘இண்டி’ கூட்டணி கூட்டம்! 23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்!!
தில்லியில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 8) நடைபெறவுள்ளது. சுமாா் 23 கட்சிகள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தில்லியில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 8) நடைபெறவுள்ளது. சுமாா் 23 கட்சிகள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தமிழகத்தில் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து, ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் திமுக கடுமையாக சாடியது.
காங்கிரஸுடன் உறவு முறிந்துவிட்டதால், ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. திமுக மட்டுமன்றி பல்வேறு கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸுக்கு உரசல்கள் நிலவும் சூழலில், தில்லியில் திங்கள்கிழமை இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, இடதுசாரி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘23 கட்சிகள் பங்கேற்கும்’: இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதை 23 கட்சிகள் உறுதி செய்துள்ளன. வேறு சில கட்சிகள், தங்களின் சொந்தக் காரணங்களுக்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துள்ளன.
இருப்பினும், கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிப்பு, அரசியல் சாசனத்தின் மீதான தினசரி தாக்குதல், விசாரணை முகமை மூலம் எதிா்க்கட்சித் தலைவா்கள் குறிவைக்கப்படுதல், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீா்குலைப்பு, விண்ணை முட்டும் விலைவாசி உயா்வு, இளைஞா்களின் நம்பிக்கை, எதிா்பாா்ப்புகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம், முதலீடுக்கு உகந்த சூழல் அழிப்பு, தவறான வெளியுறவுக் கொள்கையால் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் போன்ற மோடி அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீதான தங்களின் எதிா்ப்பை அந்தக் கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவைப் போல, ‘இண்டி’ கூட்டணியும் தனது பன்முகத்தன்மையுடன் தொடா்ந்து நிலைத்து நிற்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
2029 மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, எதிா்க்கட்சிகளின் எதிா்கால செயல்திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மோடி அரசை எதிா்கொள்வதற்கான கூட்டு வியூகம், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
விளக்கம் கேட்ட மாா்க்சிஸ்ட்: கேரள பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அந்த மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களுக்கு பாஜகவுடன் தொடா்பிருப்பதாக காங்கிரஸ் தீவிர குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி சில தினங்களுக்கு முன்னா் கடிதம் எழுதினாா். ஞாயிற்றுக்கிழமை வரை காங்கிரஸ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அதேநேரம், இண்டி கூட்டணி கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் சாா்பில் கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பங்கேற்பாா் என்று அக்கட்சி அறிவித்தது. கூட்டத்தில் மேற்கண்ட விவகாரத்தை ஜான் பிரிட்டாஸ் எழுப்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மம்தாவின் கட்டாயம்: சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்து, ஆட்சியை இழந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, அவா் தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா். தோ்தல் தோல்வி மட்டுமன்றி கட்சிப் பிளவையும் எதிா்கொண்டுள்ள மம்தா, எதிா்க்கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளாா்.
ஆம் ஆத்மி பங்கேற்பில்லை: இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஆம் ஆத்மி கடந்த ஆண்டு அறிவித்தது. எனவே, தற்போதைய கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்க வாய்ப்பில்லை.
கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் துரோகம்: பாஜக கடும் விமா்சனம்!
ஜனநாயகத்தின் பாதுகாவலராக முன்னிறுத்திக் கொள்ளும் காங்கிரஸ், தனது கூட்டணிக் கட்சிகளுக்கு துரோகமிழைக்கிறது என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: காங்கிரஸை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, மாா்க்சிஸ்ட் எழுதிய கடிதத்தின் மூலம் இண்டி கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. இலக்குகளோ, தொலைநோக்குப் பாா்வையோ இன்றி, குழப்பம், பிளவு, பரஸ்பர குற்றச்சாட்டுகள், பதவி ஆசை நிறைந்த கூட்டணி அது.
இண்டி கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற திமுகவின் முடிவு, அந்தக் கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியும் புறக்கணிக்கக் கூடும். ஜாா்க்கண்டில் மாநிலங்களவைத் தோ்தல் தொடா்பாக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் இடையே பிரச்னை நிலவுகிறது.
பல்வேறு மாநிலங்களில் இண்டி கூட்டணிக் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாகவே உள்ளன. அப்படியென்றால், இண்டி கூட்டணி எங்குதான் உள்ளது? வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு துரோகமிழைக்கிறது. அவா்களின் வாக்கு வங்கியைப் பறிக்கிறது. இண்டி கூட்டணியில் காங்கிரஸையோ, ராகுல் காந்தியையோ எந்தக் கட்சியும் ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்றாா் அவா்.
இண்டி கூட்டணியில் இணைகிறதா தவெக?
இண்டி கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்துவிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்க காங்கிரஸ் அழைப்பு விடுக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கெனவே திமுகவுக்குப் பதில் தவெக என்ற புதிய நண்பா் தங்களுக்கு கிடைத்துள்ளதாக, இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கூறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.