எதிர்காலப் போர்கள் இணைய, பல்முனை தாக்குதலாக இருக்கும்: முப்படைத் தலைமைத் தளபதி
எதிர்காலப் போர்கள் இணைய மற்றும் பல்முனை தாக்குதலாக இருக்கும் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்தார்.
எதிர்காலப் போர்கள் இணைய மற்றும் பல்முனை தாக்குதலாக இருக்கும் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்தார்.
ராணுவத் தளவாடத் தொழிற்சாலை தொடக்க விழாவில் சனிக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: போர், போருக்கான ஆயுதங்கள், போர் நடைமுறைகள் ஆகியவை வேகமாக மாறி வருகின்றன. நவீன போர் முறையானது மனித ஆற்றல், மரபுசார்ந்த ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், ரோபோக்கள், இணையவழி அமைப்புகள், விண்வெளித் தொழில்நுட்பங்கள், துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்கள் ஆகியவை சார்ந்ததாக இருக்கும்.
எதிர்காலப் போர்கள் இணையம் சார்ந்ததாகவும் பல்முனை தாக்குதலைக் கொண்டதாகவும் இருக்கும். போர்க்களங்கள் என்பவை புவியியல் நிலப்பரப்புகளை மட்டுமே சார்ந்திராமல் தகவல் வலைப்பின்னல்கள், இணையவழி உள்கட்டமைப்பு ஆகியவற்றை சார்ந்ததாகவும் இருக்கும்.
Advertisement
Advertisement
அதுபோன்ற சூழலில் தேசியப் பாதுகாப்பு படைவீரர்களின் வீரதீரத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, தொழில் திறன், உற்பத்தி சார்ந்த வல்லமை, புத்தாக்கத் திறன் உள்ளிட்டவற்றை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.
புதுமை படைத்தல், ஆயுத உற்பத்தியை துரிதப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தை வேகமாக ஏற்றுக் கொள்ளும் ராணுவம் ஆகியவற்றை உள்ளடங்கிய எந்தவொரு நாடும் உத்திசார்ந்த ஆதாயத்தைப் பெற்றிருக்கும்.
மிகவும் திறன் வாய்ந்த ராணுவத்துக்கும் வலுவான தொழில் கட்டமைப்பு தேவைப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்த நோக்கமாக மட்டுமின்றி உத்திசார்ந்த தேவையாகவும் உள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதி சாதனை அளவுகளைத் தொட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை ஏற்றுமதி தற்போது ரூ.38,000 கோடியாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
"நைப்' குழுமம், பீரங்கிகளுக்கான குண்டுகளை உற்பத்தி செய்ய உள்ளது.
ஷீர்டி நகரம் மத நம்பிக்கை மற்றும் ஆன்மிகத்துக்காக அறியப்படுகிறது. இனி இந்த நகரம் பாதுகாப்புத் துறை உற்பத்தி, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பப் புத்தாக்கம், தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அறியப்படும்.
இந்தத் தொழிற்சாலை ஒரு தொழில்துறைத் திட்டமாக மட்டுமின்றி பாதுகாப்புத் துறையில் தற்சார்பை எட்டும் லட்சியத்தின் ஓர் அங்கமாகவும் திகழ்கிறது என்றார் அவர்.