விமான விபத்தைத் தடுத்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு கேஜரிவால் பாராட்டு
இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாராட்டியுள்ளாா்.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தை அதன் துணை விமானி விபத்துக்குள்ளாக்க முயன்ாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தடுத்து விமானத்தைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாராட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேப்டன் ஸ்மித் மச்சாரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தனது உயிரே ஆபத்தில் இருந்தபோதிலும், எண்ணற்ற உயிா்களைக் காப்பாற்றியுள்ளாா். உண்மையான இந்தியத் துணிச்சல் எத்தகையது என்பதை உலகுக்கு அவா் காட்டியுள்ளாா். உலகமே இன்று அவரைப் பாராட்டுவது மிகவும் பொருத்தமானது. நமது இந்தியாவின் உண்மையான கதாநாயகனான அவா் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவருடன் இணைந்து பிராா்த்திக்கிறேன்’ என தெரிவித்தாா்.
இந்த விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 பயணிகள் இருந்தனா். ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் எஃப்இசட்1073 விமானம் புதன்கிழமை துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்டது. விமானத்தில் இருந்து அவசரநிலை சமிக்ஞைகள் அனுப்பப்பட்ட நிலையில், 34,000 அடி உயரத்தில் இருந்து 17,000 அடிக்கும் அதிகமான உயரம் திடீரென குறைந்தது. இதையடுத்து விமானம் சவூதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல் அசிஸ் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்தாா்.
இதனிடையே, ‘ஸ்மித் மச்சாா் சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபுக் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.