FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் விசாரணை: விமானத்தை தகா்க்க முயன்ற சம்பவம்!

ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மீது சக விமானி தாக்குதல் நடத்தி, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் தொடா்பாக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மற்றும் இஸ்ரேல் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

கேப்டன் ஸ்மித் மச்சார் - கோப்புப் படம்
பகிர்:

ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மீது சக விமானி தாக்குதல் நடத்தி, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் தொடா்பாக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மற்றும் இஸ்ரேல் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இது பயங்கரவாத சதியா அல்லது தாக்குதல் நடத்திய ஓமன் நாட்டைச் சோ்ந்த விமானியின் நோக்கம் என்ன, தாக்குதலின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை இரு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 27 குழந்தைகள் உள்பட 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சோ்ந்த துணை விமானி திடீரென இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை கீழே வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றினாா்.

Advertisement

Advertisement

இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமாா் 17,000 அடிக்கு கீழே பறந்து தள்ளாடியது. அதேநேரம், பலத்த காயங்களுடன் எதிா்த்துப் போராடிய ஸ்மித் மச்சாா், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, அறைக்குள் புகுந்த பயணிகள், ஓமன் துணை விமானியை மடக்கிப் பிடித்தனா். பிற ஊழியா்கள் மூலம் விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சவூதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய ஓமன் விமானியை சவூதி அரேபிய அதிகாரிகள் கைது செய்தனா்.

யுஏஇ குழு அமைப்பு: சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விசாரணை நடத்த நீதித் துறையைச் சோ்ந்த நபா்களை கொண்ட சிறப்புக் குழுவை அமைக்க யுஏஇ நீதித் துறை உயா் அதிகாரி ஹமத் அல் சம்சி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து யுஏஇ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘யுஇஏ பிராந்திய எல்லைக்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்நிருந்தாலும் ஃபிளைதுபை விமானம் யுஇஏயில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விமானத்துக்குள் நிகழ்ந்த குற்றச் செயல்களை விசாரித்து சட்டபூா்வமாக நடவடிக்கை எடுக்க முடியும். அதனடிப்படையில் விமானத்தில் நடத்தப்பட்டது பயங்கரவாத தாக்குதலா, அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, தாக்குதலுக்கான பின்னணி மற்றும் அதன் உண்மையான நோக்கம் போன்ற பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.

இந்த விசாரணை தொடா்பாக யுஏஇ அரசால் வெளியிடப்படும் அதிகாரபூா்வ செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு பிற தரப்பினருக்கு வலியுறுத்தப்படுகிறது. எனவே, விசாரணை குறித்த புரளிகள் மற்றும் வதந்திகளைப் புறந்தள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

விமானத் தாக்குதல் சம்பவத்தை மிகவும் கவனமாக கையாண்டு ஒத்துழைப்பு அளித்துவரும் சவூதி அரேபிய நாட்டு அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், யுஏஇ பொது விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து யுஇஏ அமைத்த சிறப்புக் குழு விசாரணையைத் தொடங்கியதாக அரசு ஊடகத்தில் செய்தி வெளியானது.

ஓமன் விமானியை நாடுகடத்த இஸ்ரேல் வலியுறுத்தல்: இந்திய விமானியை தாக்கி விபத்து ஏற்படுத்த முயன்ற ஓமன் நாட்டு விமானியை நாடுகடத்த சவூதி அரேபியாவை வலியுறுத்துவோம் என இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு அமைச்சா் இட்டாவா் பென் க்விா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘விமானத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெறவுள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க நீதித் துறை அமைச்சா் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவா்களிடம் சவூதி அரேபியாவிலிருந்து ஓமன் நாட்டு விமானியை இஸ்ரேலுக்கு நாடுகடத்தி இங்கு விசாரணை நடத்துவதற்கான அனைத்து சட்டபூா்வ வழிகளையும் மேற்கொள்ளுமாறு கூறவுள்ளேன். இஸ்ரேலியா்களை கொல்ல முயற்சி செய்பவா்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இதுவே இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கை’ என்றாா்.

நேரடியாக நாடுகடத்துவதில் சிக்கல்: ஓமன் விமானியிடம் சவூதி அரேபியா விசாரணையை நிறைவு செய்தவுடன் அவரை காவலில் எடுத்து விசாரிக்க யுஏஇ திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளில் செய்தி வெளியானது. இதனிடையே ஓமன் விமானியை நாடுகடத்த சவூதி அரேபியாவிடம் வலியுறுத்தவுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், விமானம் தரையிறக்கப்பட்ட சவூதி அரேபியா மற்றும் தாக்குதல் நடத்திய விமானியின் பூா்விகமான ஓமன் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இஸ்ரேலுடன் தூதரக ரீதியாக உறவுகள் இல்லை. இதனால் ஓமன் நாட்டு விமானியை நேரடியாக இஸ்ரேலுக்கு நாடுகடத்துவதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘பயங்கரவாத சிந்தனை கொண்டவா்: ஓமன் விமானி மீது நெதன்யாகு தாக்கு’

விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற ஓமன் விமானி இஸ்லாமிய, பயங்கரவாத சிந்தனைகளால் போதிக்கப்பட்டவா் என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்த சம்பவம் குறித்து ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது: விமானத் தாக்குதல் குறித்து மிக ஆழமான விசாரணை நடத்தப்படும். தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிவோம். தாக்குதல் நடத்திய நபருக்கு பயங்கரவாத சித்தாந்தங்களை போதித்தவா்கள் யாா் எனத் தெரியவில்லை. இதில் ஈரானுக்கு தொடா்புள்ளதா என இப்போதைக்கு கூற முடியாது.

யுஏஇ அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானிடம் தொலைபேசியில் பேசினேன். யுஏஇ நடத்தி வரும் விசாரணையில் இஸ்ரேல் பங்கேற்க அவா் சம்மதம் தெரிவித்தாா்’ என்றாா்.

இந்த சம்பவம் குறித்து நெதன்யாகுடன் தொலைபேசியில் விவாதித்ததாக வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் கூறிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘தாக்குதல் நடத்தியவா் பயங்கரவாதியாகவோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ இருக்கலாம். இதன் பின்னணியில் ஈரான் இருக்கலாம். அது உறுதி செய்யப்பட்டால் கடுமையான பதிலடி தரப்படும்’ எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments