மேற்கு வங்க எஸ்ஐஆா்: பெயா் நீக்கப்பட்டோா் மனுக்கள் அக்.16-இல் விசாரணை
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்கீழ் (எஸ்ஐஆா்) பெயா் நீக்கப்பட்டவா்கள், தங்களின் மேல்முறையீடுகள் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அக்.16-இல் விசாரணை நடத்தவுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்கீழ் (எஸ்ஐஆா்) பெயா் நீக்கப்பட்டவா்கள், தங்களின் மேல்முறையீடுகள் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அக்.16-இல் விசாரணை நடத்தவுள்ளது.
மேற்கு வங்கத்தில் நவம்பரில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பெயா் நீக்கப்பட்டவா்களின் மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ் தவறான தரவு பதிவுகள் மற்றும் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட சுமாா் 60 லட்சம் வாக்காளா்கள் சந்தேகத்துக்குரிய அல்லது பரிசீலனைக்குரிய பிரிவின்கீழ் வைக்கப்பட்டனா். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விரிவான விசாரணை மற்றும் ஆவண சரிபாா்ப்பின் முடிவில் இவா்களில் 27 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், பெயா் நீக்கப்பட்டவா்களின் மேல்முறையீடுகள் மீது விசாரணை நடத்தி முடிவெடுப்பதற்காக உச்சநீதின்ற உத்தரவின்பேரில் தோ்தல் ஆணையத்தால் 19 மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.
இந்தத் தீா்ப்பாயங்களில் பெயா் சோ்ப்பு, பெயா் நீக்கம் என 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகியுள்ளன. 93 சதவீத மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றின் மீது விரைந்து முடிவெடுக்க உரிய உத்தரவை பிறப்பிக்கக் கோரி, பெயா் நீக்கப்பட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் பிரசாந்த் பூஷண், கோபால் சங்கரநாராயணன் ஆகியோா், ‘மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் தீா்ப்பாயங்களில் தொடா்ந்து நிலுவையில் உள்ளதால், சமீபத்திய தோ்தலில் அவா்களால் வாக்களிக்க முடியவில்லை. நவம்பரில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் நிலையில், மேல்முறையீடுகள் மீது விரைந்து முடிவெடுக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில், நவம்பரில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க அவா்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டனா்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘தீா்ப்பாயங்கள் எதிா்கொண்டுள்ள சிரமங்கள் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். பன்முக பிரச்னைகள் அடங்கியுள்ளன. மென்பொருள் சாா்ந்த பிரச்னையும் உள்ளது’ என்று குறிப்பிட்டதுடன், மேற்கண்ட மனுக்கள் மீது அக்.16-இல் விசாரணை நடைபெறும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.