தில்லியில் வீட்டுக்கு வெளியே பிரபல பாடகர் அடித்துக் கொலை!
தில்லியில் மணிப்பூர் பாடகர் அடித்துக் கொல்லப்பட்டது பற்றி...
மணிப்பூரைச் சேர்ந்த பாடகர் சோங்தம் விக்ரம் சிங் என்பவர், தில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே திங்கள்கிழமை அதிகாலை அடித்துக் கொல்லப்பட்டார்.
தில்லி அருகே கிலோகரி கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிப்பூரைச் சேர்ந்த கிதார் மற்றும் மேற்கத்திய இசைக் கலைஞரான விக்ரம் சிங் (55) வசித்து வருகிறார்.
அவரது குடியிருப்புக்கு அருகேவுள்ள ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களும் டெலிவரி நபர்களும் விக்ரம் சிங்கின் வீட்டுக்கு வெளியே அதிக சப்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்து, திங்கள்கிழமை அதிகாலை மது அருந்தியுள்ளார்கள்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக மது அருந்தியவர்களிடம் விக்ரம் சிங் கேள்வி எழுப்பிய நிலையில், இருதரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் இணைந்து தாக்கியதில் விக்ரம் சிங் படுகாயமடைந்தார்.
விக்ரம் சிங்கை மீட்ட அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தில்லி காவல்துறையினர் ஒரு மைனர் உள்பட 8 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,
“மணிப்பூரைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், தனது வீட்டின் வெளியே நிலவிய சப்தத்தை குறைக்குமாறு கேட்டதற்காக அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டின் தலைநகரிலேயே, தனது வீட்டின் வாசலிலேயே ஒரு தந்தை கொல்லப்பட்டுள்ளார். நாம் இங்கே பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா? என்ற கேள்வியைத் தில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பமும் எழுப்புகின்றன.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்தச் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க, அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகமும் தில்லி காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
இது குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விக்ரம் சிங்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Famous singer beaten to death outside his home in Delhi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.