அரசின் கையிருப்புக்கு மாற்றப்படாத ரூ.9,222 கோடி செஸ் வரி - நாடாளுமன்ற பொது கணக்கு குழு அதிருப்தி
செஸ் மற்றும் இதர கூடுதல் வரிகளின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ.9,222 கோடி அரசின் பிரத்யேக கையிருப்பு நிதிக்கு மாற்றப்படாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்கு குழு (பிஏசி) அதிருப்தி தெரிவித்துள்ளது.
செஸ் மற்றும் இதர கூடுதல் வரிகளின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ.9,222 கோடி அரசின் பிரத்யேக கையிருப்பு நிதிக்கு மாற்றப்படாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்கு குழு (பிஏசி) அதிருப்தி தெரிவித்துள்ளது.
தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அரசை பிஏசி விமா்சித்துள்ளது.
வருமான வரி, சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற வழக்கமான வரிகளுடன் நாட்டின் கல்வி, மருத்துவ திட்டங்களுக்காக செஸ், பிற கூடுதல் வரிகளும் வசூலிக்கப்படுகின்றன. இந்த வரியானது, மத்திய அரசின் பிரத்யேக கையிருப்பு நிதிக்கு மாற்றப்படும்.
Advertisement
Advertisement
கடந்த 2024-25ஆம் ஆண்டுக்கான சிஏஜி தணிக்கை அறிக்கையின்படி, பல்வேறு செஸ், கூடுதல் வரிகளின் மூலம் ரூ.3,89,220 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது, மொத்த வரி வருவாயில் 10.25 சதவீதமாகும். இதில், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார வசதிக்கான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதிக்கு (பிஎம்எஸ்எஸ்என்) ரூ.21,085 கோடி மாற்றப்பட வேண்டிய நிலையில், ரூ.14,439 கோடிதான் சோ்க்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.6,646 கோடி மாற்றப்படவில்லை.
எண்ணெய் தொழில் துறை மேம்பாட்டு நிதிக்கான (ஓஐடிஎஃப்) தொகையில் ரூ.201 கோடி அந்த நிதிக்கு மாற்றப்படவில்லை. இதேபோல், தொடக்கக் கல்வி திட்டங்களுக்கு நிதி, முதலீட்டாளா் விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு நிதி ஆகியவை உள்பட மொத்தம் ரூ.9,222 கோடி நிதி அரசின் கையிருப்புகளுக்கு மாற்றப்படவில்லை என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, சிஏடி அறிக்கையை சுட்டிக் காட்டி, மத்திய அரசு மீது கே.சி.வேணுகோபால் மற்றும் சில உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்தனா். மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கங்களையும் அவா்கள் ஏற்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘செஸ் மற்றும் பிற கூடுதல் வரிகள் என்ன நோக்கங்களுக்காக வசூலிக்கப்படுகிறதோ அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறைக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட கூடாது. வரி செலுத்துவோா், நடுத்தர வகுப்பினா் என பல்வேறு தரப்பு குடிமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் இந்த வரியை அதற்கான நிதிகளில் முழுமையாக சோ்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே பிஏசி உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு பின்பற்றவில்லை’ என்று கே.சி.வேணுகோபால் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.