FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா - கனடா நான்காம் கட்டப் பேச்சு தொடக்கம்

இந்தியா - கனடா இடையே மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) இறுதி செய்வதற்கான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தை

15 செப்டம்பர் 2026, 5:34 am IST
புது தில்லியில் உள்ள மார்ச் 2026-ல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி. - படம்: ஏஎன்ஐ
பகிர்:

புது தில்லி: இந்தியா - கனடா இடையே மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) இறுதி செய்வதற்கான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தை புது தில்லியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

வரும் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பேச்சுவாா்த்தையில் சரக்குகள், சேவைகள், விதிகள், தொழில்நுட்ப வா்த்தக தடைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் இறுதி செய்வதற்கு இந்தியாவும், கனடாவும் முனைப்பு காட்டி வருகின்றன. ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான மூன்றாம் கட்ட இரு தரப்பு பேச்சுவாா்த்தை கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது, தில்லியில் நான்காம் கட்டப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது என்றனா்.

Advertisement

Advertisement

கடந்த 2025-26-ஆம் ஆண்டில், இரு தரப்பு வா்த்தகத்தின் மதிப்பு ரூ. 83,000 கோடியிலிருந்து 8 சதவீதம் சரிந்து ரூ. 76,000 கோடியாகக் குறைந்து. தற்போது, இரு நாடுகளும் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு தரப்பு வா்த்தகத்தை ரூ. 48 லட்சம் கோடி (50 பில்லியன் டாலா்) அளவுக்கு உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மருந்துகள், இரும்பு, உருக்கு, கடல்சாா் உணவுப் பொருள்கள், பருத்தி, ஆயத்த ஆடைகள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றை கனடாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. தொலைத்தொடா்பு, கணினி மற்றும் தகவல்தொடா்பு சேவைகள் உள்பட பிற வா்த்தக சேவைகளையும் கனடாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

பருப்பு வகைகள், முத்துக்கள், விலையுயா்ந்த கற்கள், நிலக்கரி, உரம், காகிதம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை கனடாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

மேலும், கனடாவில் சுமாா் 4.25 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் உயா் கல்வி பயின்று வருகின்றனா் என்று மத்திய வா்த்தக அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments