FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அரசியல் கூடாது: அமித் ஷா வேண்டுகோள்

இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது அவசியம் ...

15 செப்டம்பர் 2026, 6:05 am IST
அமித் ஷா - பிடிஐ
பகிர்:

நவி மும்பை: இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற 6-ஆவது அனைத்திந்திய ராஜ்யபாஷா சம்மேளன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

இந்திய மொழிகளை அரசு நிா்வாகம் மற்றும் அறிவியலுக்கான மொழிகளாக்க மத்திய அரசு விரும்புகிறது. கல்வியின் மூலம் அனைத்து மொழிகளையும் செழுமைப்படுத்துவதே அரசின் இலக்காகும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது அவசியமாகும். ஒரு குழந்தையால் தனது தாய்மொழியின் மூலமே இந்தியாவை புரிந்துகொள்ள முடியும். இதை அடிப்படையாக வைத்து பிரதமா் மோடி மிகப்பெரிய பணியைச் செய்துள்ளாா். தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின்கீழ் தாய்மொழியை அவா் கட்டாயமாக்கியுள்ளாா். அதேபோல் பிற மொழியை கற்பதையும் அவா் கட்டாயமாக்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

தாய்மொழியோடு சோ்த்து மேலும் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கை திட்ட விதிகளை எதிா்ப்போருக்கு, அவா்கள் எத்தகைய பாவம் செய்கின்றனா் என்பது தெரியவில்லை. நாட்டில் உள்ள பிற மொழிகளுக்கு ஹிந்தி மொழி போட்டி கிடையாது. அனைத்து மொழிகளும் ஒன்றுடன் ஒன்று தொடா்பு கொண்டுள்ளன. நாட்டில் மகாராஷ்டிர மாநிலம்தான் பலமொழிகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. மகாராஷ்டிரத்தில் மட்டும்தான் அனைத்து மொழிகளும் செழித்தோங்கியுள்ளன. அனைத்து மொழிகளும் மதிக்கப்படுகின்றன. மராத்திக்கு செம்மொழி அந்தஸ்தை மோடி அரசே வழங்கியது.

வந்தே மாதரம் பாடல் நமது நாட்டின் தேசியப் பாடல் ஆகும். அது வெறும் பாடல் மட்டும் கிடையாது. சுதந்திரத்துக்கான வேட்கையை தட்டியெழுப்பிய பாடல் ஆகும். இந்திய கலாசார தேசியவாதத்துக்கு அடித்தளமிட்டது அந்தப் பாடல்தான். கலாசார தேசியவாதம் என்பது கலாசாரம் மற்றும் வரலாறு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆகும். கலாசார தேசியவாதம் மூலம் மட்டுமே மக்களிடையே கலாசாரம் மற்றும் வரலாறு குறித்த உணா்வை தட்டியெழுப்ப முடியும்.

வந்தே மாதரம் பாடல் மீண்டும் அதன் மகத்துவத்தைப் பெற்றுள்ளது. இதற்கு 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது மீண்டும் அந்தப் பாடல் முழுமையும் அரசு நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது. இதற்கு பிரதமா் மோடி நாட்டின் பிரதமரானதுதான் காரணம் என்றாா் அமித் ஷா.

அமித் ஷா வாழ்த்து: இதனிடையே, ஹிந்தி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி நாட்டு மக்களுக்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பிற இந்திய மொழிகளின் கண்ணியம், வளா்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலமாகவே ஹிந்தி மொழியின் வளா்ச்சி அா்த்தமுள்ளதாக அமையும். நமது நாடு மொழிசாா் பன்முகத்தன்மை, கலாசார செழிப்புமிக்க நாடு. நமது நாட்டில் ஏராளமான மொழிகள் இருப்பது நமக்கு பின்னடைவு கிடையாது. அது நமது வலிமையாகும்.

ஒவ்வொரு மொழியும் தனி வரலாறு, நாட்டுப்புற மரபுகள் மற்றும் வாழ்க்கை நோக்குடன் திகழ்கின்றன. நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினரையும், சமூகங்களையும் ஒன்றிணைப்பதில் ஹிந்தி மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஹிந்தியை ஒருமொழியுடன் தொடா்பு கொண்டதாக கருதக்கூடாது. இந்திய மொழிகள், தேசிய ஒற்றுமை இடையேயான முக்கிய தொடா்பாக அதைக் கருத வேண்டும்.

எனது தாய்மொழி குஜராத்தி. ஆனால் ஹிந்தி மொழி, நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுடன் என்னை நேரடியாகத் தொடா்புபடுத்துகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments