வருங்கால வைப்பு நிதி வழக்கு: மத்திய அமைச்சரவை முடிவை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் கீழ் ஊதிய உச்சவரம்பை உயா்த்துவது தொடா்பான மனுவை இனி பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் கீழ் ஊதிய உச்சவரம்பை உயா்த்துவது தொடா்பான மனுவை இனி பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பி.எஃப். பிடித்தம் செய்வதற்கான மாத அடிப்படை ஊதிய உச்ச வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயா்த்த மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2014-ஆம் ஆண்டுமுதல் மாற்றமின்றி இருக்கும் மாதம் ரூ.15,000 என்ற தற்போதைய ஊதிய உச்சவரம்பை உடனடியாக திருத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீங்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதை நாளிதழ்கள் மூலம் நாங்கள் தெரிந்துகொண்டோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
எனினும், இந்த முடிவு தொடா்பான அதிகாரபூா்வ அறிவிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதையடுத்து, ‘உங்கள் வாதத்தை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அமைச்சரவை முடிவைத் தொடா்ந்து அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கருதுவதால், இந்த மனுவை இனிமேலும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சரவை முடிவு எடுத்ததாக நாளிதழ்கள் உறுதிப்படுத்தியுள்ளன. விரைவில் அரசுத் தரப்பு முறைப்படியான அறிவிக்கை வெளியிடுவாா்கள்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
‘குறைந்தபட்ச ஊதியம், பணவீக்கம், நுகா்வோா் விலைக் குறியீடு, வருமான வரி விலக்கு வரம்புகள் மற்றும் தனிநபா் நிகர தேசிய வருமானம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பிஎஃப் பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்சவரம்பை ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்த வேண்டும். இதற்காக கட்டாய நடைமுறையை அறிவிக்க வேண்டும்’ என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.