FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2025-2026: முக்கிய புதிய திட்டங்கள்

ரூ.102 கோடியில் முதல் முறையாக 34 இலட்சம் ஏக்கரில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செயல்படுத்துதல்

Updated On : 15 மார்ச் 2025, 2:13 pm IST
பகிர்:

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார்.

நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை (மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.

வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன்.

அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய புதிய திட்டங்கள்:

* ரூ.42 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகள் வழங்கிட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் மூலம் 1000 முதல்விரின் உழவர் நல சேவை மையங்கள்.

* நெல் உற்பத்தியினை அதிகரித்திட ரூ.160 கோடி ஒதுக்கீடு

- ரூ.102 கோடியில் முதல் முறையாக 34 இலட்சம் ஏக்கரில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செயல்படுத்துதல்

- ரூ.58 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் 18 இலட்சம் ஏக்கரில் செயல்படுத்துதல்.

* இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பிலிருந்து உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.841 கோடி ஒதுக்கீட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம்.

* 2024-25 அரவை பருவத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை - ரூ.297 கோடி.

* 3 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்திட உழவு மானியமாக ரூ.24 கோடி

* நுண்ணீர் பாசனத்திட்டம் - 3 இலட்சம் ஏக்கர் பரப்பிற்கு ரூ.1,168 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாட்டில் முதல் முறையாக முந்திரி வாரியம் உருவாக்கம் - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* முதன் முறையாக 20 உழவர் சந்தைகளில் பசுமைக் காய்கறிகளை நுகர்வோர் தங்கள் இல்லங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ள உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் (Online Door Delivery) இணைக்கப்படும்.

* வேளாண் விளைபொருட்களுக்கான நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 17,000 உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்திற்காக ரூ.215 கோடியே 80 இலட்சம் ஒதுக்கீடு

* 63 ஆயிரம் மலைவாழ் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்திட ரூ.22 கோடியே 80 இலட்சம்

* முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டம் 15 திட்டக் கூறுகளுடன் செயல்படுத்திட ரூ.142 கோடி ஒதுக்கீடு

* 2,338 கிராம ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்று உழவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் உன்னத முயற்சியில் ரூ.269 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேளாண் விளைபொருட்களுக்கு 100 மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைத்திட முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு. இதற்கு அதிகபட்சமாக அலகு ஒன்றுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

* ரூ.50 கோடியே 79 இலட்சம் மதிப்பீட்டில் 11 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும்.

* மக்காச்சோளம் விவசாயிகள் அதிக வருமானம் பெற 1,87,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி ஒதுக்கீட்டில் மக்காக்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயலாக்கம்

* நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் 90 ஆயிரம் விவசாயிகள் ரூ.108

கோடியே 6 இலட்சத்தில் பயனடையும் வகையில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம்.

* தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூ.52 கோடியே 44 இலட்சத்தில் செயல்படுத்தப்படும்.

* உயிர்ம வேளாண்மையினை (Organic Farming) பரவலாக்கம் செய்திட ரூ.12 கோடி ஒதுக்கீடு.

- பள்ளி, கல்லூரி மாணவர்கள் பண்ணை சுற்றுலா

- விழிப்புணர்வு முகாம்கள்

- ஊக்கத் தொகை மற்றும் பதிவு கட்டண விலக்கு

* ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு உழவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்க ரூ.21 கோடி ஒதுக்கீடு

* குறைந்த நீர்த்தேவை உள்ள பயிர்களை ஊக்குவித்திட ரூ.12 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம்

* தளர்வில்லா விளைச்சல் பெற தரமான விதை உற்பத்திக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு

* ரூ.12 கோடியே 21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பருத்தி உற்பத்தி பெருக்கத் திட்டம்

* “தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை” - உயர் மதிப்பு மரங்களை வளர்ப்பதற்கும், அதனை பதிவு செய்து வெட்டுதல் மற்றும் விற்பனைக்கு எடுத்து செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் எளிதாக்கி பசுமை தமிழ்நாட்டை உருவாக்குதல்.

* ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூ.125 கோடியில் - வீட்டுத் தோட்டத்திற்காக - காய்கறி விதைகள், பழச்செடிகள், பயறு வகைகள் ஆகிய 25 இலட்சம் தொகுப்புகள் வழங்கப்படும்.

* 4,000 நடமாடும் காய், கனி விற்பனை வண்டிகள் மானியத்தில் வழங்கப்படும்.

* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.35 கோடியே 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.10 கோடியே 50 இலட்சம்.

* காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை பகுதிகளிலும் உள்ள “சி” மற்றும் “டி” கால்வாய்களில் தூர்வாரும் பணிகளில் மீதமுள்ள 2,925 கிலோ மீட்டர் நிலத்திற்கு ரூ.13 கோடியே 80 இலட்சம் ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் 24 கோடி செலவில் 1000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

* நெல், மக்காச்சோளம், வாழை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை முடிய உள்ள சாகுபடியில் இயந்திர மயமாக்குதலை கடைபிடிக்க 1,500 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3 கோடி ஒதுக்கீட்டில் இயந்திர சாகுபடி செயல் விளக்கத் திடல்கள் (Demonstration Plots) அமைக்கப்படும்.

* ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்படும்.

* 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.39 கோடியே 20 இலட்சம் செலவில் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் புதியதாக ஒருங்கிணைத்து, உழவர்கள் தேசிய அளவில் வர்த்தகம் செய்து, கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.

* 50 உழவர் சந்தைகளில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல்

* வட்டாரந்தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் வர்த்தகம் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.

* ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும்.

* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் புதிய கண்டுபிடிப்பிற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதியாக ரூ 1 கோடி ஒதுக்கீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments