பாம்பு துரத்துவது போன்று கனவு வந்தால்? பொதுவான 5 கனவுகளும் நம்பிக்கையும்!
பாம்பு துரத்துவது போன்று பலரும் கனவு கண்டிருப்போம். அதனால் என்னவாகும் என அச்சமும் ஏற்பட்டிருக்கும்.. அது பற்றி...
தூக்கத்தில் வந்த கனவால், திடீரென தூக்கம் கலைந்து விழித்து, அன்றைய நாள் முழுக்க அதையே நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்திருப்போம். இது பலரும் உணர்ந்த அனுபவம்தான்.
பொதுவாக பல கனவுகள் நினைவில் இருப்பதில்லை. சில கனவுகள் முன்னுக்குப் பின் முரணாக எந்த தொடர்பும் இல்லாமல் ஏன் இப்படி ஒரு கனவு வந்தது என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்.
ஆனால், நம்முடைய முன்னோர்களிடையே இந்த கனவுகள் குறித்த சில (மூட)நம்பிக்கைகள் இருந்துள்ளன. இதனை மூட நம்பிக்கை என்று எளிதாக புறந்தள்ளியும் விடலாம். இதுவெறும் நம்பிக்கை அல்லது மூட நம்பிக்கைத்தானே தவிர அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதல்ல.
Advertisement
Advertisement
ஆனால், இதுவரை நம் மூதாதையர் நம்பி வந்த மற்றும் பொதுவாக பலருக்கும் வரும் ஐந்து விதமான கனவுகள் பற்றியும் அது குறித்து இன்றளவும் நிலவும் கருத்துகளும் என்ன என்று பார்த்தால்..
முதல் கனவு... கொஞ்சம் கொடூரமானதுதான்
பாம்பு துரத்துவது அல்லது பாம்பு கடிப்பது போன்ற கனவுகள் இருக்கின்றன. இதில், பாம்பு கடிப்பதை விடவும், பாம்பு துரத்துவதுதான் மிக மோசமான கனவாகக் கருதப்படுகிறது.
ஒருவரது கனவில் பாம்பு துரத்தினால், எதிரிகளால் தொல்லை, ஏதேனும் துன்பம் நேரிடலாம் என்று நம்பப்படுகிறது. அதுவே பாம்பு கடிப்பது போன்ற கனவுகள் வருவது எதிரிகளின் தொல்லை அல்லது ஏதேனும் தொல்லைகள் உருவாகும் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இது வெறும் எச்சரிக்கையாக இருப்பதற்குத்தானே தவிர, நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்பதாகக் கொள்ளக்கூடாது.
இதனை உளவியலாளர்கள் எப்படி வரையறுக்கிறார்கள் என்றால், யாரேனும் மனதில் பயம், அச்சம், எதிரிகளால் தங்களுக்கு ஏதேனும் நேரிடுமோ என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கே பெரும்பாலும் இதுபோன்ற கனவுகள் தோன்றுகின்றன என்கிறார்கள்.
உயரத்திலிருந்து விழுவது போன்று
மிக உயரத்திலிருந்து விழுவது போன்று கனவு வந்து, நாமே உறக்கத்தில் அச்சமடைந்து அசைவது போன்ற கனவு நிச்சயம் பலருக்கும் வந்திருக்கலாம்.
இது குறித்து முன்னோர்கள் நம்பிக்கை என்பது, நமது வாழ்வில் ஏதேனும் தடை வரலாம். அல்லது இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படலாம் என்பதே. ஒருவர் வாழ்க்கையில், மிக முக்கியமான ஒரு செயல் அவரது கட்டுப்பாட்டிலிருந்து நழுவலாம் என்பதற்கான அறிகுறி என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், மனதுக்குள் இருக்கும் அழுத்தம், நினைவுகள், நிலையற்ற தன்மை குறித்த அச்சமே இதற்குக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அடி தூள்.. கோயில் கனவில் வந்தால்?
எல்லாமே எச்சரிக்கையாக மட்டும் இருக்குமா என்ன? கோயிலுக்குச் செல்வது போல, கடவுளைப் பார்ப்பது போல கனவுகள் வந்தால் நல்லது நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாம். ஏதேனும் தடைபட்ட காரியம் கைகூடும், இறைவன் அருள் கிடைக்கிறது என்றுகூட நினைத்துக் கொள்ளலாமாம். இல்லை ஏதேனும் வேண்டுதல்கள் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
ஓடும் தண்ணீர் கனவில் வந்தால்
சிலருக்கு தண்ணீர் கனவில் வந்தால் அதுவும் ஓடும் தண்ணீர் கனவில் வந்தால் செலவு வரப்போகிறது என்று அர்த்தம் என சொல்கிறார்கள். சிலருக்கு இதுவே தங்கள் வாழ்க்கையில் மேம்பாடு அடைவார்கள், அதற்கான அறிகுறியாகவே தெளிந்த ஓடை ஓடுவது போன்ற கனவுகள் என்கிறார்கள்.
பற்றி எரியும் தீ
தீ பரவுவது போன்ற கனவுகள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி, நெருங்கிய சொந்தங்கள் வீட்டில் நிகழ்ச்சிகள் நடைபெறலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், நெருங்கிய சொந்தங்கள், நிகழ்ச்சிகள் என்றாலும் செலவுக்கு காரணமாகிவிடும் என்பதால் செலவுகளுக்கான அறிகுறியாகவும் இருக்கிறது.
ஆனால், முன்பே சொன்னது போல இவையெல்லாம் நம் முன்னோர்கள் வழக்கில் சொல்லி வந்தவை மட்டுமே, இதற்கான எழுத்துபூர்வ ஆதாரங்களோ ஆராய்ச்சிகளோ இல்லை. ஒருவேளை உங்கள் வீடுகளில் இதுபோன்று முன்னோர்களின் கனவு பற்றிய நம்பிக்கை ஏதேனும் இருந்தாலும் பகிரலாம்.
What if you dream of being chased by a snake? Five common dreams and the beliefs associated with them!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.